குழந்தை துன்புறுத்தல் வழக்கு : மூத்த மகனை அடிக்காமல் இளைய மகனை அடித்தது ஏன்? - தாய் துளசி பரபரப்பு வாக்குமூலம்...!
’’துளசியின் மூத்த மகன் கோகுல் துளசி போன்றே இருப்பதாகவும், இளைய மகன் பிரதீப் துளசியின் கணவர் வடிவேலழகனை போன்று இருப்பதால் அடித்து துன்புறுத்தும்படி கள்ளக்காதலன் பிரேம் குமார் கூறியுள்ளார்’’
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (37). இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல் (4) மற்றும் பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே துளசி, கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கணவன் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பை கொடூரமான முறையில் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதில் வாய் மற்றும் முதுகிலும், உடலில் பல்வேறு இடங்களிலும் பலத்த காயம் அடைந்த பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் துளசி, சொந்த ஊரான ராம்பள்ளிக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே பெற்ற தாயே குழந்தையின் முகத்தில் கைகளாலும், செருப்பாலும், மிருகத்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து துளசி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செஞ்சி அனைத்து மகளிர் நிலைய காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை, துளசியை ஆந்திர மாநிலம் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட துளசியைத் தனிப்படை போலீசார் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.25 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு துளசியிடம் குழந்தையைத் தாக்கியது தொடர்பாக செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
குழந்தையை தாயே கொடுமைப்படுத்தும், பதறவைக்கும் வைரல் வீடியோ : எப்படி இருக்கிறது குழந்தை?
விசாரணையில் துளசிக்கும் சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் வீடியோ கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீடியோக்கள் மூலம் இருவரும் அடிக்கடி பேசி பழகியுள்ளனர். துளசியை பிரேம்குமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துளசியின் மூத்த மகன் கோகுல் துளசி போன்றே இருப்பதாகவும், இளைய மகன் பிரதீப் துளசியின் கணவர் வடிவேலழகனை போன்று இருப்பதாகவும் பிரேம் குமார் கூறியுள்ளார். அதேபோல குறைப் பிரசவத்தில் பிறந்ததால் அவனை அடித்துத் துன்புறுத்த வேண்டுமென பிரேம்குமார் கூறியதால் துளசி இரண்டாவது மகனை துன்புறுத்தியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக கொலை ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து துளசியை கைது செய்தனர். துளசி, செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குத் தூண்டுகோலாக இருந்த பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் ஆறு பேர் கொண்ட தனிப்படை சென்னை விரைந்துள்ளனர்.
குழந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...! - தாக்குதலின் பின்னணியில் கள்ளக்காதலன்...!