(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி
பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 10 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் இவரது உறவினர்களான சுகந்தி, ஜெயந்தி, கோமதி, முரளி, செல்வம், ராஜேஷ். இவர்கள் அனைவரும் அதே கிராமத்தில் அடகு கடை, மளிகை கடை மற்றும் பாத்திர கடை என பல்வேறு தொழில்களை கூட்டாக நடத்தி வருகின்றனர். இக்குடும்பத்தினர் ஜமீன்கூடலூரில் நன்கு அறிந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம், தங்களிடம் பணம் கொடுத்தால் அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக கூறி உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஜமீன் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 10 கோடி அளவிற்கு பணம் கொடுத்த நிலையில், இதுவரை எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களிடம் கூறி வந்துள்ளனர். பணத்திற்கு லாபமும் ஈட்டி தராமல், முதலீடாக கொடுத்த பணத்தையும் தராமல் தொடந்து அலைக்கழித்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அன்று சங்கர் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாகச் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது சங்கர் பணம் கொடுத்தவர்களை தரக்குறைவாக பேசியும், முதலீடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என்றும் நீங்கள் தொடர்ந்து பணத்தை கேட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சங்கரிடம் பணம் கொடுத்தவர்கள், கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தைக் கொடுத்து ஏமாந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று பணத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்துள்ளனர்.