சீர்காழி அருகே இருசக்கர வாகனம் திருடிய இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் இரு சக்கரம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவிவருகிறது. மேலும் தங்களின் இருசக்கர வாகனம் எப்போது காணாமல் போகும் என்ற மனநிலையில் இருந்து வருவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வந்துள்ளது. இந்நிலையில் அதுபோன்று மேலும் ஒரு நிகழ்வாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சீர்காழி, மயிலாடுதுறை சுற்றுவட்டாரம் முழுவதும் தொடர்ந்து பைக்குகளை திருடி சென்று விற்று வந்துள்ளனர்.
நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் ஒரு வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடி கொண்டு மீன்சுருட்டியில் மறைத்து வைத்துவிட்டு, மீண்டும் இருவரும் மீன்சுருட்டியிலிருந்து தாங்கள் எடுத்துவந்த பைக்கை திருட வந்த இடத்தில் காட்டு பகுதியில் மறைத்துவிட்டு சென்ற நிலையில் அதனை எடுக்க வந்துள்ளனர். அதனை எடுத்து செல்ல ஆதமங்கலம் கிராமத்திற்கு வந்த போது திருடர்களை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டு வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்துவைத்திருந்த பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருடி சென்ற இருசக்கர வாகனங்கள் எத்தனை எனவும், அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.