நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் திரையிடலின் போது இயக்குநர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் ட்ரெய்லர் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம்  தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நேற்று (அக்டோபர் 19) தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. 


இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்ற நிலையில், இரண்டாம் பாதி திரைக்கதை சொதப்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் ரிலீசுக்கு முன்னால் அளித்த நேர்காணலில் முதல் 10 நிமிடங்களை காண தவற வேண்டாம் என ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார். இதனால் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே ரசிகர்கள் தியேட்டர்களில் ஆஜராகி வருகின்றனர். 






கிட்டதட்ட ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில், வசூலிலும் லியோ படம் புதிய சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு மேலும் சர்ப்ரைஸ் தரும் வகையில் இயக்குநர் கௌதம் மேனன் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது லியோ படம் தியேட்டரில் திரையிடப்படுவதற்கு முன்னால், அவர் இயக்கிய “துருவ நட்சத்திரம்” படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்படும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இன்னும் ஒரு மாதத்தில் துருவ நட்சத்திரம் படம்


 கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’.  இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி என பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நிதி பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் ஒருவழியாக நவம்பர் 24 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசர்,பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.