வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.


அதிமுகவுடன் கூட்டணியா ?


சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக தரப்பில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்கள். கடந்த ஆட்சியின் போது தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி விடுமுறை அறிவித்தார். தமிழர் வரலாற்றில் தைப்பூசத்தில் விடுமுறை அறிவித்தது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் உணர்வு அடிப்படையில் ஒரு நெருக்கம் உள்ளது. தமிழர் என்ற ரத்த உறவு மட்டும்தான், வேறு ஒன்றும் இல்லை. அதிமுக உடன் கூட்டணி என்பது எனக்கு உடன்படாது. பிரபாகரன் குறித்து பேசும்போது எடப்பாடி பழனிசாமி எழுந்து சென்றுவிடுவார். அதனால் அது கடினம் என்றும் கூறினார்.



அண்ணாமலை குறித்து கருத்து


தமிழ்நாட்டு அரசியல் மக்களுக்கு பிடிக்கவில்லை, தேசிய அரசியல்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை நிறைய படிக்க வேண்டும். இந்தியா என்ற தேசமே இல்லை பல தேசியங்களின் ஒன்றியம் தான் இந்தியா. மாநிலங்களவை தான். அண்ணாமலை சின்னப்பிள்ளை, நாங்கள் ஐந்து வயதிலிருந்து அரசியல் படித்து வருகிறோம். திடீரென வந்து பேசி வருகிறார். அண்ணாமலையை அமைதியாக அமருங்கள் தம்பி என்று வடிவேல் காமெடியை கூறி கிண்டல் செய்தார். மத்தியில் பதவியே இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. மத்தியில் ஆட்சி இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்துவிடும் என்றும் விமர்சனம் செய்தார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு என்பது நீண்டநாளாக மாற்றம் வர வேண்டும். மாற்றத்திற்கான வழியே இல்லை. திமுக, அதிமுக மாறி மாறி வருகிறது. நாம் தமிழர் கட்சி வழியாக வந்தே நிற்கிறது. எங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வரவேண்டும், அந்த நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறினார்.



 


மோடி தமிழ்நாட்டில் போட்டியிட மாட்டார் - சீமான்


தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருந்து வரும் நாங்கள் முதல் கட்சியாக வர எவ்வளவு நேரம் ஆகும் விரைவில் நடக்கும் என்றும் நிச்சயம் வெல்வோம் மக்கள் ஒருநாள் எங்களைத் தேடுவர்கள். அதுவரை மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்போம். நாம் தமிழர் கட்சி எட்டு கோடி மக்களுடன் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை முழுமையாக நேசித்து, மக்களை நம்பி தனித்து போட்டியிடுவதாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று முடிவு செய்துள்ளோம். 20 ஆண்கள், 20 பெண்கள் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறினர். ஏறத்தாழ வேட்பாளர்கள் தேர்வு முடிவு பெற்றுவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் அழைத்துப் பேசும்போது எங்கள் கொள்கை முடிவு முடியாது என்று கூறிவிட்டதாக பேசினார். ஓட்டிற்காக பணம் வாங்குவது மக்கள் பழகிவிட்டார்கள். இவை ஒழியவேண்டும், மாறவேண்டும் தற்போது நான் செய்கிறேன், நாளை விஜய் வந்தால் பணம் கொடுக்கமாட்டார். அதை வலியுறுத்தி பேசுவார். எனக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது, அவருக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது பணம் இல்லாமல் வாக்கு செலுத்த முடியும் என்று மக்கள் யோசிப்பார்கள் என்றார். தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கொடுத்து வெளியே விடுவது நல்லது என்பது தான் என்னுடைய கருத்து. அவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை, ஆட்சி முறையே அவ்வாறு தான் உள்ளது என்று விமர்சனம் செய்தார்‌. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடமாட்டார். அவ்வாறு போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன், நிறைய கேள்விகளை கேட்பேன் என்றும் கூறினார்.