நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. மாஸ்டர் படத்துக்குப் பின் இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அன்றைய தினம் முதல் ரிலீசாவதற்கு முதல் நாள் வரை லியோ படம் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் இப்படி ஆபாச வார்த்தை பேசலாமா என பலரும் கண்டனம் தெரிவித்ததால், பின்னர் ட்ரெய்லரில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து படத்தின் ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு சென்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையும் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேசமயம் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டதால், தமிழ்நாட்டு எல்லையில் உள்ள ரசிகர்கள் அம்மாநிலங்களுக்கு படையெடுத்தனர். 


இப்படியான நிலையில் லியோ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் sacnilk தளம் வெளியிட்ட தகவலின்படி, “தமிழ்நாட்டில் ரூ.30 கோடியும், கேரளாவில் ரூ.11 கோடி, கர்நாடகாவில் ரூ.14 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.15 கோடி, இந்தியில் ரூ. 4 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.74 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் முதல் நாளில் ரூ.66 கோடி என முதல் நாளில் மட்டும் ரூ.140 கோடி வசூலை ஈட்டியுள்ளது” என தெரிவித்துள்ளது.