மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேல்மருவத்தூர் அதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவான இருந்து வந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று (அக்டோபர் 19) மாலை 5 மணியளவில் காலமானார். முன்னதாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்த தகவல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் வந்த வண்ணம் உள்ளனர். 


இதனிடையே இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, பாஜக் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். 


இதனிடையே பங்காரு அடிகளார் மறைவால் மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று மேல்மருவத்தூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் அழுது கொண்டு வருவதால், அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனையில் இருக்கைகள் ஆகியவற்றை தயார் நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிர்வாகம் வைத்திருக்கிறது. இதனிடையே பங்காரு அடிகளார் உடல் கோயில் கருவறை அருகே உள்ள தியான மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ஆடையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் தான் காணப்படுகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத நிலையில் சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


இப்படியான நிலையில் பங்காரு அடிகளார் உடலானது இன்று மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அவரது உடலானது அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை சந்தன பேழையில் வைத்து  தியான நிலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.