தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி.பழனிசாமி, “திமுக குடும்ப கட்சி. குடும்பத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக. திமுக என்ற கம்பெனி கட்சியின் டைரக்டர் உதயநிதி ஸ்டாலின். கனிமொழி, சபரீசன், துர்கா கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார். திமுக கார்ப்ரேட் கம்பெனி. இந்த ஆட்சி வந்து இரண்டரை ஆண்டுகள் என்ன செய்தார்கள் என்பதுதான். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இதுதான் அவர் செய்த வேலை. மக்களைப் பற்றி கவலைப் படாத பொம்மை அமைச்சர் ஸ்டாலின்.




இந்த தென்காசி மாவட்டத்தில் ஒரு திட்டம் கூட நிறைவேற்றவில்லை. தென்காசி மாவட்டம் உதயமானது அதிமுக ஆட்சியிலே. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதிமுக ஒன்றுமே செய்யவில்லை என பச்சைப் பொய் கூறினார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். ரூ.2 கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி மையம், ரூ.50 கோடியில் ஆலங்குளம் குடிநீர் திட்ட விரிவாக்கம், ரூ.43 கோடியில் நகராட்சியில் மறு சீரமைப்பு குடிநீர் திட்டம், ரூ.540 கோடியில் சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.250 கோடியில் திருநெல்வேலி-ராஜபாளையம் சாலை விரிவாக்கம், ரூ.15 கோடியில் 4 அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ரூ. 110 கோடியில் கட்டி முடித்துள்ளோம். கடையநல்லூர் தொகுதியில் தாலுகா அலுவலகம் அனுப்பப்பட்டது. பூலித்தேவருக்கு அரசு விழா நடத்தியுள்ளோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.




அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டிருக்கிறார்கள். அதாவது வீராணம் முதல் தெற்குகாவலாக்குறிச்சி வரை கால்வாய் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறார்கள். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகள் ரூ.41.07 கோடியில் தொடங்கப்பட்டன. ஆனால் அந்தத் திட்டம் கிடப்பில் போட்டுள்ளார். ரூ.8.06 கோடி மதிப்பில் அரசு கலைக் கல்லூரி இதுவரை திறக்கப்படவில்லை. அம்மா மடிக்கணி திட்டம், அம்மா இருசக்கர வாகனம், அம்மா கிளினிக் திட்டங்களை ரத்து செய்துவிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வரும்போது மீண்டும் அம்மா கிளினிக் தொடங்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். அவர்கள் எத்தனைக் கோப்புகளில் கையெழுத்துப் போட்டார்கள். இப்போது சாக்குபோக்கு சொல்லித் தட்டிக்கழிக்கிறார்கள். ஆட்சி இருக்கும்போது ஒரு பேச்சு. ஆட்சி இல்லாதபோது ஒரு பேச்சு. நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் என்ன செய்தோமோ அதைத்தான் திமுக செய்துகொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.




திமுக ஆட்சி மீது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எங்குபார்த்தாலும் போராட்டம். பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம். எப்போது பார்த்தாலும் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். ஊழல் செய்வதற்கு திராவிட மாடல். கனெக்சன், கமிசன்,கரப்சென்,இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் கமிசன். கமிசன் இல்லாத துறையே இல்லை. இதனால்தான் மக்கள் வெறுத்துப் போய் இந்த ஆட்சிமீது கோபம் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றுவதற்காக மக்களைத் திசை திருப்புவதற்காக சனாதனம் என்று சொல்லிக்கொணடிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலபேருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். திமுக தேர்தலில் வாக்குறுதி கொடுத்தமாதிரி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும். இது கண்டிக்கத்தக்கது. அதிமுக பாஜகாவில் இருந்து பிரி்ந்துவிட்டது என்று சொன்னாள் ஸ்டாலின் சொல்கிறார் பி டீம்ன்னு. உங்களுக்கு என்ன கவலை.ஸ்டாலின் அச்சப்படுகிறார். பயப்படுகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது.




யார் பிரதமர் என்று கேட்கிறார்.நாங்க பிரதமர காட்டுவது இருக்கட்டும். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று ஸ்டாலின் சொல்ல முடியுமா?. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலே சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். நம்முடைய எண்ணம் தமிழகத்தை திரும்பிப் பார்க்கவும், தமிழகத்துக்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெறுவதற்கும், அந்தத் திட்டத்திற்கான நிதியை பெறுவதற்கும், தமிழகத்திலே உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாக்கவும் இதுவே எங்கள் தேர்தல் முழக்கம். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்” என்றார்.