சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 48 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள கம்பன் நகரில் வசித்து வருபவர் 53 வயதான லட்சுமி. இவர் சேந்தங்குடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டின் துக்க காரியத்திற்காக கடந்த 5ம் தேதி சென்றுள்ளார். அப்படியே துக்க நிகழ்வுகள் முடித்து நாதல்படுகையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று மாலை 6ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் முன்பக்க கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதில் இருந்த 48 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை கண்டு லெட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ஆசிரியர் லட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பன் நகரில் மட்டும் மாதம் மாதம் தொடர் திருட்டு ஏற்படுவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். தங்களுக்கும் தங்கள் வீடுகளுக்ம் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சீர்காழி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர் திருட்டு சம்பவங்களை அவர்களால் தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கம்பன் நகரில் மட்டும் பல முறை வீட்டுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ந்து கதையாக இருந்து வருகிறது. இதுநாள் வரை இப்பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிகளை கூட காவல்துறையிரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.