PM Modi Mizoram Campaign: மணிப்பூர் வன்முறை காரணமாக தான் மிசோரம் தேர்தல் பரப்புரையில், பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 


மோடி எனும் பரப்புரை ஆயுதம்:


2014ம் ஆண்டு மோடியை முன்னிலைப்படுத்தியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு,  பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும், பாஜகவிற்காக மோடி தீவிர பரப்புரையில் ஈடுபடுவது வழக்கம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மோடி நடத்தும் ”ரோட் ஷோ” மிகவும் பிரபலமானது. மோடியை தங்களது பிராண்ட் ஆகவும்,  பரப்புரையின் முக்கிய ஆயுதமாகவே பாஜக கருதுகிறது. தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி வந்து பரப்புரையில் ஈடுபடமாட்டாரா என்பது தான், பாஜகவை சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணமாகவும் உள்ளது. அவருடைய பரப்புரைகள் தேர்தலில் அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் நம்புகின்றனர். அண்மையில் தேர்தல் நடைபெற்ற கர்நாடகாவில் 7 நாட்களில் 19 பேரணி மற்றும் 6 ரோட் ஷோக்களில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


மிசோரமை புறக்கணித்த பிரதமர் மோடி:


ஆனால், இன்று வாக்குப்பதிவு (நவ.7) நடைபெறும் மிசோரம் மாநிலத்தில் ஒருமுறை கூட பிரதமர் மோடி நேரில் சென்று பரப்புரையில் ஈடுபடவில்லை. வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று, அந்த மாநில கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஆடைகளை அணிந்து பேசி வாக்காளர்களை கவருவார். தனது ஆட்சிக் காலத்தில் தான், வடகிழக்கு மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக பல இடங்களில் மோடியே பதிவு செய்துள்ளார். அப்படி இருந்தும் மிசோரம் மாநிலத்தில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பரப்புரையில் ஈடுபடாதது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை மத்திய பாஜக அரசு முறையாக கையாளததன் விளைவாக தான், மக்களை சந்திக்க முடியாமல் மோடி மிசோரமிற்கு செல்லவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


மணிப்பூர் விவகாரம் - பாஜகவை ஒதுக்கிய கூட்டணி:


மிசோரமில் ஆளும் கட்சியாக உள்ள மிசோ தேசிய முன்னணி கட்சியின் கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து கடந்த 30ம் தேதி மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், “மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். எனவே பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் நான் பரப்புரையில் ஈடுபடமாட்டேன்” என மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் காரணமாக பிரதமர் மோடி தனது பரப்புரையை ரத்து செய்து கொண்டார். மிசோரம் தேர்தலுக்காக வெறும் 10 நிமிட காணொலி உரையை மட்டும் அவர் வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் மோடி பங்கேற்காத ஒரே சட்டமன்ற தேர்தல் பரப்புரை இதுதான்.


கருத்துகணிப்பு:


முன்னதாக மிசோரம் மாநில தேர்தல் தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து கருத்துகணிப்பு நடத்தியது. அதில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி, 17 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 10 முதல் 14 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 முதல் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.