"பள்ளிக்கு போகவே பயமா இருக்கு!" - தலைமையாசிரியர் கெடுபிடியால் மண்ணெண்ணெய் குடித்த 12-ஆம் வகுப்பு மாணவி...
மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியர் திட்டியதால் 12-ஆம் வகுப்பு மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் இடையேயான மோதல் விவகாரத்தில், பொறுப்பு தலைமையாசிரியருக்கு ஆதரவாகப் பேச மறுத்து அவர் திட்டியதால் மனமுடைந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களிடையே நிலவும் உள்கட்சி மோதல்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திரகுமார் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இங்கு பணிபுரியும் மற்ற சில ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தலைமையாசிரியருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கல்வித் துறை அதிகாரிகள் மட்டத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மாணவிகளுக்கு நச்சரிப்பு மற்றும் மிரட்டல்
கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடக்கும் போது, தனக்கு ஆதரவாகவும் மற்ற ஆசிரியர்களுக்கு எதிராகவும் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தலைமையாசிரியர் இந்திரகுமார் பள்ளியில் பயிலும் மாணவிகளைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரைத் தலைமையாசிரியர் பிரத்யேகமாக அழைத்து, தனக்குச் சாதகமாக அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த மாணவி தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சி
இந்நிலையில், தன்னுடைய பேச்சைக் கேட்காததால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர் இந்திரகுமார், மாணவியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இன்று காலை பள்ளிக்கு கிளம்பிய நிலையில், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தற்போது மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய மருத்துவமனை மருத்துவர்கள், "மாணவியின் உடலில் மண்ணெண்ணெய் நச்சுத்தன்மை பரவியுள்ளதால், அவருக்குத் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போதைக்குக் கவலைக்கிடமாகவே உள்ளது. அடுத்த 24 மணி நேரம் கழிந்த பிறகே மாணவியின் உயிருக்கு உள்ள ஆபத்து விலகியதா என்பது குறித்து உறுதியாகக் கூற முடியும்" எனத் தெரிவித்தனர்.
"பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது" - கண்ணீருடன் மாணவி வாக்குமூலம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தலைமையாசிரியர் இந்திரகுமார் சாரைப் பார்க்கவே எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அவர் என்னைக் கடுமையாகத் திட்டியதால் தான் இந்த முடிவை எடுத்தேன். இனியும் அந்தப் பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது" என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) பாலசுப்பிரமணியன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவியின் பெற்றோரிடமும் சம்பவம் குறித்துக் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், சம்பவம் குறித்த மேல்நடவடிக்கை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். "தற்போது நமது முதன்மை நோக்கம் மாணவியின் உயிரைக் காப்பாற்றுவது தான். அவரது உடல்நிலை சீரடைந்த பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுருக்கமாகக் கூறிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து பூம்புகார் காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியரின் அதிகாரத் துஷ்பிரயோகத்தால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















