திருவண்ணாமலை : தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது
தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் மகன் சிவக்குமார் (வயது 49), முத்துக்குமரன் (46). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை காந்திநகர் மெயின்ரோடு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் சென்று தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்து இரட்டிப்பாக பணம் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய பொதுமக்கள் பலர், அந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் சிவக்குமாரும், முத்துக்குமரனும் சேர்ந்து தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததோடு கடந்த 2019-ல் அந்த நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு திடீரென தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிவக்குமார், முத்துக்குமரன் ஆகிய இருவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கடந்த 24.5.2014 முதல் 23.5.2019 வரை 296 பேரிடமிருந்து ரூ.52 லட்சத்து 19 ஆயிரத்து 400-ஐ பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், சரவணன் ஆகியோர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் சிவக்குமாரை சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்