(Source: ECI/ABP News/ABP Majha)
பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!
தன்னுடன் காதலை முறித்த நபரை 30 போலி கணக்குகள் மூலம் தவறாக காவல்துறையிடம் இளம்பெண் ஒருவர் சிக்க வைத்துள்ளார்.
சரியான புரிதல் இல்லாமல் காதல் ஜோடிகளுக்கு இடையில் பிரச்னை வந்து பிரிவது நடப்பதுதான். அது பரஸ்பர பிரிவு என்றால் சிக்கல் இல்லை. ஆனால் சிலர் பிரிவுக்கு பிறகும் வெறுப்பால் சில தேவையில்லாத வேலைகளை செய்வார்கள். காதலிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கசிய விட்டு மிரட்டுவது போன்ற குற்றச்சம்பவங்களில் சில ஆண்கள் ஈடுபடுவதும் உண்டு. அவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு சற்று மாறாக இங்கு ஒரு பெண் தன்னை பிரேக் அப் செய்த நபரை காவல்துறையில் சிக்க வைக்க பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் அயர்லாந்து ஐன்ஸ்வோர்த்(20). 20 வயதான இவருக்கும் லூயிஸ்(22) என்ற நபருக்கும் 2019ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு லூயிஸ் மற்றும் ஜன்ஸ்வோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அது அவர்களின் காதலை முறிக்கும் அளவிற்கு வேகமாக வளர்ந்துள்ளது. இதனால் இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்துள்ளனர்.
அதன்பின்பு ஐன்ஸ்வோர்த் டெக்லான் ரைஸ் என்ற புதிய நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. எனினும் தன்னுடைய பழை காதலன் லூயிஸ் தன்னைவிட்டு திடீரென பிரிந்ததை ஏற்க முடியாமல் அவரை காவல்துறையில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 30 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை இவர் உருவாக்கியுள்ளார். அந்த கணக்குகளிலிருந்து அவரும் லூயிஸும் எடுத்து கொண்ட படங்களை அனுப்புவது மற்றும் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றை ஐன்ஸ்வோர்த் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவற்றை ஆதாரமாக வைத்து கொண்டு காவல்துறையினரிடம் தன்னுடைய முன்னாள் காதலர் லூயிஸ் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனக்கு இதுபோன்ற ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பவது மட்டுமல்லாமல் விரைவில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக அப்பெண் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை ஏற்று காவல்துறையினர் லூயிஸை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனினும் அப்பெண் அளித்த ஆதாரத்தை வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த கணக்குகள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் இருந்து தரவுகளை கேட்டுள்ளனர். அப்போது அந்நிறுவனம் அளித்த தரவுகளின் படி அந்த 30 கணக்கில் பெரும்பாலானவை ஜன்ஸ்வோர்த்தின் மின்னஞ்சலை வைத்து தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் மீதி கணக்குகள் ஐன்ஸ்வோர்த் பயன்படுத்தும் இணையதளத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை விசாரணை செய்துள்ளனர். அவர் முதலில் தனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இறுதியில் அவர் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் போலி கணக்குகள் தொடங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய காதலர் தன்னை பிரேக் அப் செய்ததால் மன உளச்சலில் இருந்தப் போது இப்படி ஒரு திட்டத்தை தீட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வீடு புகுந்து திருட முயன்ற ஜட்டி ஆசாமி... வசமாக சிக்கியதால் வச்சி செய்த ஊர்மக்கள்...!