பெங்களூருவில் சாக்குப் பையில் அடைத்து குப்பை லாரியில் வீசப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக கிடந்தவர் ஆஷா (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷம்சுதீன் (வயது 33) என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் தனித்தனியாக திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
விதவையாக இருந்த ஆஷா, பெங்களூருவில் உள்ள அர்பன் நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார். முகமது ஷம்சுதீன், ஏற்கனவே திருமணமாகியவர். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அசாமில் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தான் வேலை பார்க்கும் இடத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது
ஆஷா அடிக்கடி மது அருந்தியதாகவும், இரவில் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியதற்காகவும் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை நடந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கடும் தகராறாக மாறியதாகவும், ஒரு கட்டத்தில் ஷம்சுதீன் ஆஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடலை மறைக்க முயன்ற அவர், அதை சாக்குப் பையில் அடைத்து தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, பின்னர் பெங்களூரு மாநகராட்சி அமைப்பான ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP)யின் குப்பை லாரியில் வீசிவிட்டு தப்பிச்சென்றார்.இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி முகமது ஷம்சுதீனை கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெற்கு பகுதி துணை காவல் ஆணையர் லோகேஷ் பி. ஜகலசர் கூறியதாவது:
"இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தீவிரமாக மாறி, ஆஷா உயிரிழக்கும் அளவிற்கு சென்றது. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது," என தெரிவித்தார்.பெங்களூருவில் நடந்த இந்த கொடூரம், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























