Crime: நில அளவீடு செய்து வரைபடம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - நில அளவையர், இடைத்தரகர் கைது
குடியாத்தம் நில அளவீடு செய்து வரைபடம் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது- அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இடைத்தரகர்களையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு வயது (45) என்பவருடைய சொந்த நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு பலமுறை வந்து சென்றுள்ளார். அதன் பிறகு சர்வே பிரிவினர் சில மாதங்களுக்கு முன்பு வேலுவின் நிலத்தை அளவீடு செய்தனர். பின்னர் நிலத்திற்கு சம்பந்தமான புல வரைபடம் கேட்டு குடியாத்தம் தாலுகா சர்வேயரை அணுகி உள்ளார். அதனைத்தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டார துணை நில அளவிட்டார் (சர்வேயர்) 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் அலைகழிக்கப்பட்டு தற்போது லஞ்ச கேட்டதால் , பணம் கொடுக்க விருப்பம் இல்லாத வேலு இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் விஜய் தலைமையில் துணை ஆய்வாளர் இளவரசன் உள்ளிட்ட காவல்துறையினர் வேலுவிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்தனர். இதனையடுத்து வேலு குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் அறைக்குச் சென்று நில அளவையர் விஜய் கிருஷ்ணனிடம் பணம் கொடுத்துள்ளார். விஜய்கிருஷ்ணா, அவருடைய உதவியாளர் கலைவாணன் வயது (27) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வேலு கலைவாணனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளார் அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் விஜய்கிருஷ்ணா, அவருடைய உதவியாளர் கலைவாணன் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லஞ்ச பணம் 15,000 ருபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கலைவாணன் நில அளவையருக்கு இடைத்தரகராக இருந்து வருவது தெரியவந்தது. மேலும் கலைவாணனிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜய்கிருஷ்ணா பள்ளிகொண்டா சாவடியை பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2017-ம் ஆண்டு முதல் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் சர்வே பிரிவில் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று தாலுகா சர்வேராக பணியாற்றி வந்தார். இவர் பணத்தை நேரடியாக வாங்குவது இல்லை. ஆம்பூர் வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கலைவாணன் என்ற உதவியாளர் மூலமாக பணம் வாங்கி வந்தது தெரிய வந்தது. இதனிடையே குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.