Kodanad Case: கோடநாடு வழக்கு விசாரணை ஏன்? - தமிழ்நாடு அரசு விளக்கம்
கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்கக் கோரி சாட்சியாக சேர்க்கப்பட்ட ரவி என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை வரும் 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கின் விசாரணையில், மேல் விசாரணை நடத்த உள்ளதால் தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் தரும் படி பல தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், மீண்டும் விசாரிப்பதாக மனுதாக்கல் செய்து அனுமதி பெறாமலேயே விசாரணை தொடங்கியுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார். மேலும், கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது வழக்கு முழுவையாக விசாரிக்கப்பட்டு வருவதால் 8 வாரம் அவகாசம் தேவை எனவும், காவல்துறை மனு நிராகரிக்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. எஸ்டேட் உரிமையாளர், நிர்வாகிகளிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை எனவும் காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 27-ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
#BREAKING | கோடாநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை - அரசுhttps://t.co/wupaoCQKa2 | #KodanaduCase | #MadrasHighCourt | #TNGovt pic.twitter.com/dTtiJBZIoZ
— ABP Nadu (@abpnadu) August 24, 2021
முன்னதாக, நேற்று கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி சசிகலா மற்றும் சுதாகரனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17 ம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோடநாடு வழக்கில் என்னை குறி வைக்கிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வருகின்ற 27 ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், சயன் அளித்த வாக்குமூலம் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.