Crime : சடலத்துடன் பைக்கில் பயணம்.. கொலை குற்றவாளி சிக்கியது எப்படி? நடந்தது என்ன?
பெங்களூருவுக்கு அருகில் இளம் ஜோடி ஒன்று 21 வயது பெண்ணின் உயிரற்ற சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது, காவல்துறை இணை ஆணையரின் அலுவலகம் முன்பு ஏற்பட்ட விபத்தால் சிக்கிக் கொண்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் இளம் ஜோடி ஒன்று 21 வயது பெண்ணின் உயிரற்ற சடலத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க நினைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது, எதிர்பாராத விதமான காவல்துறை இணை ஆணையரின் அலுவலகத்தின் முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிக்கிக் கொண்டது.
பெங்களூருவின் ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவர் கடந்த மே 9 அன்று தன் குடியிருப்புக்கு அருகில் வாழ்ந்து வரும் இளம் ஜோடியான ரகு - துர்கா ஆகியோரிடம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். ஏற்கனவே கடன் விவகாரம் காரணமாக, சௌமியா, ரகு ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே 9 அன்று, பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரகு, கோபத்தில் சௌமியாவை அறைந்ததில் அவர் அங்கேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பதட்டமடைந்த தம்பதியினர், உயிரிழந்த சௌமியாவின் உடலை சுமார் 8 மணி நேரங்களாக தங்கள் வீட்டில் பாதுகாத்து வைத்ததோடு, நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னபட்னா பகுதியில் எரித்து விடவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரும் தங்கள் நண்பர்களான நாகராஜ், வினோத் ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்களில் இவர்கள் அனைவரும் புறப்பட்டுள்ளனர். ஒரு வாகனத்தில் ரகு, துர்கா தம்பதியினரும், மற்றொரு வாகனத்தில் வினோத், நாகராஜ் ஆகியோர் உயிரற்ற சௌமியாவின் சடலத்துடனும் பயணித்துள்ளனர்.
சுமார் 40 கிலோமீட்டர் கடந்த பிறகு, ராமநகரா நகரத்தின் காவல்துறை இணை ஆணையரின் அலுவலகம் முன்பு, நள்ளிரவு சுமார் 2 மணிக்கு, சாலையில் வேகத்தடை இருந்ததைக் கவனிக்காததால், வினோத், நாகராஜ் ஆகியோருடன் சௌமியாவின் உடலும் சாலையில் விழுந்துள்ளது. இதனால் அருகில் இருந்த காவல்துறையினர் மூவரையும் ராமநகரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது எதுவும் தெரியாத ரகுவும், துர்காவும் சன்னபட்னாவில் காத்துக் கொண்டிருந்தனர்.
அரசு மருத்துவர் சௌமியாவின் உடலைப் பரிசோதித்ததில் அவர் எட்டு மணி நேரங்களுக்கு முன்பே உயிரிழந்ததைக் காவல்துறையினரிடம் தெரிவித்த பிறகு, இந்த மொத்த திட்டமும் அம்பலம் ஆகியுள்ளது. காவல்துறையினர் வினோத், நாகராஜ் ஆகியோரை ரகுவிடம் பேச வைத்து, இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு, தற்போது கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், சௌமியா ரகுவிடம் பணம் கடனாக வாங்கினாரா திருடினாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். மேலும், சௌமியாவின் குடும்பத்தினர் அவரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவரது சடலத்தை வீட்டில் வைத்துக் கொண்டே இருவரும் தெரியாது எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.