ஆன்மீக பூமியில் நடந்த கொடூர கொலை.. பகலில் அட்டகாசம்.. யார் இந்த வசூல்ராஜா ?
"காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா 5 பேர், கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது"

ஆன்மீக பூமி என்று காஞ்சிபுரத்தை கூறினாலும், காஞ்சிபுரத்தில் ரவுடிகள் அட்டகாசம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. சிறு குற்றங்களை செய்பவர்கள், நாளடைவில் ரவுடிகளாக மாறி தாதாக்களாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வருவது காஞ்சிபுரத்திற்கு புதிதல்ல. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் பிரபல ரவுடி, ஸ்ரீதர் தனபால் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றது.
காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
அதன்பிறகு ரவுடிகளை களையெடுக்க, காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்த தொடங்கினர். ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு, யார் அடுத்த ஸ்ரீதர் என்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்பிறகு காஞ்சிபுரத்தில் கொலை சம்பவங்கள் குறைந்தது. அதேபோன்று கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்குவது, உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் குறைந்து வருகிறது.
பகலில் நடந்த எறிய கொலை
இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில், பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை, செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த வசூல் ராஜா. ராஜா மீது 20-க்கு மேற்பட்ட கொலை கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில், உள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில், இருந்து வெளியே வந்த வசூல்ராஜாவை வீட்டின் அருகாமையில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த வசூல்ராஜா?
ஆரம்பத்தில் வசூல்ராஜா சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். 2009-ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை கொலை செய்து பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதி சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை தொடர்ந்து, ரவுடிகள் மத்தியில் வசூல்ராஜாவிற்கு தனி பெயர் வரத் தொடங்கியது.
வசூல்ராஜா திரைப்படம் வெளியானபோது, வட்டிக்கு விடும் தொழிலில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக் கொண்டுள்ளார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல், கடனை வசூல் செய்து கொடுப்பதிலும் வல்லவராக இருந்து வந்துள்ளார்.
நூதன முறையில் கொலை செய்யும் வசூல்ராஜா
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ராஜா முடிவெடுத்து விட்டால், அந்த நபரை நோட்டமிட்டு, அவருக்கு நெருக்கமானவர்களை விலைக்கு வாங்கி விடுவாராம். அதன் பிறகு அந்த நபரை முழு போதை ஆக்கி விடுவாராம். அதன் பிறகு போதையில் இருக்கும் நபரை எளிதாக, கொலை செய்துவிட்டு செல்லும் பழக்கத்தை வைத்து வந்துள்ளார்.
திருந்தி வாழ முயற்சி
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வசூல்ராஜா திருந்தி வாழ முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குகளில் சரண்டர் ஆகி வழக்குகளை முடிப்பதில் ராஜா கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. இதேபோன்று ராஜா வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் இந்த கொலைச் சம்பவம் நடந்தேறி உள்ளது. பழைய கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

