கள்ளக்குறிச்சி: பள்ளி வளாகத்தில் மாணவி சடலம்.! மரணத்தில் சந்தேகம்.. போலீசார் தீவிர விசாரணை!
12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக மாணவ மாணவிகள் உயிரிழப்பது அல்லது தற்கொலை செய்து கொள்வது போன்ற செய்திகள் அதிகமாக வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தனியார் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி(17) 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். இந்தச் சூழலில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளி செயல்பட்டுள்ளது. பள்ளி வகுப்பிற்கு சென்று வந்த பிறகு சக மாணவிகளுடன் இணைந்து ஸ்ரீமதி உணவு சாப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்து அனைவரும் தூங்க சென்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க:கன்னியாகுமரி: ''ஏமாத்திட்டாரு.. அதான் குத்திக்கொன்னுட்டேன்'' 100-க்கு போன் போட்ட பெண்! ஷாக்கான போலீசார்!
அடுத்த நாள் காலையில் மாணவி ஸ்ரீமதி சீருடையுடன் பள்ளி வளாகத்தில் இறந்து சடலமாக இருந்துள்ளார். அதைப் பார்த்த பாதுகாவலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பள்ளியின் 3வது மாடியில் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அந்த விடுதி இருக்கும் மாடியிலிருந்து இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த மாணவியின் தாய் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இதை சந்தேக மரணமாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாணவியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக தெளிவாக தெரியவில்லை. ஆகவே இந்த வழக்கில் காவல்துறையினர் விரைவாக உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுடன் பயின்ற சக மாணவி ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பாக மாணவிகள் சோகத்துடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்