Aishwarya Rajinikanth: 60 இல்லயாம்.. 200 சவரன் தங்கமாம்..! ரஜினிகாந்த் மகள் வீட்டு கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்..!
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் 200 பவுன் நகை கொள்ளை போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து ஏற்கனவே 60 சவரன் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 200 சவரன் நகை கொள்ளை போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா, கடந்த வாரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், எனக்கு சொந்தமான நகைககள் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும் காணவில்லை. தனது வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி என்பவர் மீதும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் மீதும் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடம் இருந்து, இதுவரை 143 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்ட நகைகளின் அளவை விட அதிகப்படியான நகைகள் மீட்கப்பட்டது.
இந்நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து ஏற்கனவே 60 சவரன் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 200 சவரன் நகை கொள்ளை போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
இயக்குநர் ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்துள்ளதாவது, “நான் போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வருகிறேன். 2019 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடந்த நிலையில், அன்றைய நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை லாக்கரில் வைத்து தனியாக பராமரித்து வருகிறேன். கிட்டதட்ட 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும் லாக்கரில் இருந்தது.
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் உள்ள வீட்டிலும், அதன்பிறகு சிஐடி நகரில் உள்ள தனது கணவரின் வீட்டிலும், பின்னர் போயஸ் கார்டனுக்கு குடியேறிய போதும் 3 வீடுகளிலும் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் செயின்ட்மேரிஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நான் இருந்தபோது லாக்கர்சாவியை அலமாரியில் தான் வைத்திருப்பேன். இது என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கும் தெரியும்.
நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்தனர். இதனிடையே கடந்த மாதம் 10 ஆம் தேதி லாக்கரை திறந்துப் பார்த்தப்போது, சில நகைகள் மட்டுமே இருந்தது. மதிப்புமிக்க மற்றும் பாரம்பரிய நகைகளை காணவில்லை. இது தொடர்பாக எனது வீட்டில் பணி செய்யும் 3 பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்தி எனது நகைகளை மீட்டுத்தர வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாக கொண்டு பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகைகளை திருடியது தெரிய வந்தது என்றும், இதுவரை 143 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read: விழுப்புரம்: தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 93 லட்சம் மோசடி - ஒருவர் கைது, 4 பேர் தலைமறைவு