ப்ளான் போட்ட சைபர் குற்றவாளி.. காத்திருந்து பிடித்த போலீஸ்.. நடந்தது என்ன ?
சென்னையில் இருந்து விமான மூலம் தப்ப முயன்ற கேரளாவை சேர்ந்த இணையதள குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்
கேரள மாநில போலீசால், இணையதள மோசடி வழக்கில், தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான, கேரள மாநில இளைஞர், சென்னையில் இருந்து விமானம் மூலம், அபுதாபிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையதள மோசடி வழக்கு
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்தவர் ஹிபத்துல்லா (24). இவர் மீது கேரளா மாநில போலீசில், இணையதளம் மோசடி வழக்கு பதிவாகி இருந்தது. ஆனால் இவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
அதோடு ஹிபத்துல்லா, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஹிபத்துல்லாவை தேடப்படும் தலை மறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போட்டு வைத்துள்ளார்.
அதிகாரிகள் சோதனை
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று அதிகாலை அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து, விமானத்தில் ஏற அனுப்பி கொண்டு இருந்தனர்.
அதிர்ச்சி தகவல்..
இதே விமானத்தில் கேரள மாநில போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியான ஹிபத்துல்லா, சென்னையில் இருந்து அபுதாபிக்கு தப்பிச் செல்வதற்காக வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, இவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட போலீசால், இணையதள மோசடி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதை அடுத்து ஹிபத்துல்லாவை சுற்றி வளைத்துப் பிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவருடைய அபுதாபி பயணத்தையும் ரத்து செய்தனர். அதோடு குடியுரிமை அதிகாரிகள், கேரள மாநில போலீசுக்கு தேடப்படும் தலைமறைவு குற்றவாளி, சென்னையில் இருந்து அபுதாபிக்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் சிக்கினார் என்ற தகவலையும் தெரிவித்தனர்.
விரைந்து வந்த கேரளா போலீஸ்
அதோடு சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஹிபத்துல்லா ஒப்படைக்கப்பட்டு, அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார். கேரள மாநிலம் காசர்கோடு தனிப்படை போலீசார், ஹிபத்துல்லாவை கைது செய்து, கேரளா அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கேரளா போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விமான நிலையத்தில் சிக்குவது எப்படி ?
ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் என் மூலம் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் எண் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவ்வாறு பாஸ்போர்ட் என் கண்காணிக்கப்படுவதால், விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனை செய்யும் பொழுது அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் தெரிய வரும். உடனடியாக அதிகாரிகள், நோட்டீஸ் கொடுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அல்லது மாநில காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது கேரளா இளைஞர் சிக்கி உள்ளார்.