Crime : உடலில் தீ வைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவர்.! காலேஜில் நடந்த பரபர சம்பவம்!
ஹைதராபாத்தில் மாணவர் சங்கத் தலைவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரையும் கட்டிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் அமைந்துள்ளது அம்பர்பேட். இங்கு அமைந்துள்ளது தனியார் கல்லூரி. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக சுதாகர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர் சாய் நாராயணா.
கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் சந்தீப். சாய் நாராயணா தனது மாற்றுச்சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், கல்லூரி முதல்வரான சுதாகர் சாய் நாராயணாவின் மாற்றுச்சான்றிதழை தர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், கல்லூரி முதல்வர் தன்னை அலைக்கழிப்பதால் மன உளைச்சல் அடைந்த சாய் நாராயணா, மாணவர் சங்கத் தலைவராக சந்தீப்பிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், சாய் நாராயணாவின் மாற்றுச்சான்றிதழ் குறித்து கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்காக சந்தீப் சென்றுள்ளார். நேற்று மதியம் கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியின் அறைக்கு சென்ற சந்தீப் தனது கையில் பெட்ரோல் கேன் எடுத்துச் சென்றிருந்தார்.
கல்லூரி முதல்வரிடம் தன்னுடைய மாற்றுச்சான்றிதழ் குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சந்தீப் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றிக்கொண்டார். அது மட்டுமின்றி கல்லூரி முதல்வர் சுதாகர் மீதும் பெட்ரோலை ஊற்றினார்.
சுதாகர் ரெட்டியின் மேசை மீது எப்போதும் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்திருக்கும். இந்த சூழலில், சந்தீப் சுதாகர் ரெட்டி மீது பெட்ரோலை ஊற்றியபோது மேசையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு சந்தீப் மீது பற்றியது. சந்தீப்பின் உடல் மீது ஏற்கனவே பெட்ரோல் இருந்ததால் அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
தன் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும், தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் கல்லூரி முதல்வர்தான் என்று எண்ணிய சந்தீப் கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை பற்றி எரியும் நெருப்புடன் கட்டிப்பிடித்தார். அவரது உடலிலும் பெட்ரோல் இருந்ததால் இருவரது உடலில் நெருப்பில் எரியத் தொடங்கியது. உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியதால் சந்தீப் மற்றும் சுதாகர் ரெட்டியின் அலறல் சத்தம் கல்லூரி முழுவதும் கேட்டது.
உடனே அங்கிருந்த பணியாளர் ஒருவர் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால், தீயை அணைக்க முயற்சி செய்த அவரும் நெருப்பில் சிக்கினார். இதையடுத்து, அந்த இடத்திற்கு வந்த மாணவர்களும், சக கல்லூரி பணியாளர்களும் நெருப்பை உடனடியாக அணைத்தனர். பின்னர், தீயில் சிக்கிய மூன்று பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் சங்கத்தலைவர் சந்தீப் தனது உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தானே அங்கிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். தற்போது வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேருடைய உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சாய் நாராயணாவின் குடும்பத்தினர் கல்லூரி நிர்வாகம் ரூபாய் 16 ஆயிரம் கட்டணம் செலுத்தாதால் சாய் நாராயணாவிற்கு தொல்லை அளித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.