நடிகையின் 4 கார்கள் முழுவதும் பணம்.. .மேற்குவங்க ஊழலில் அடுத்த திருப்பம்... தேடி அலையும் அமலாக்கத்துறை!
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான நான்கு கார்களை அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் தேடி வருகின்றனர்.
மேற்குவங்க மெகா ஊழல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான நான்கு கார்களை அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் தேடி வருகின்றனர். சோதனையில், கொல்கத்தாவில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் 50 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில், இவ்வழக்கு தொடர்புடைய பணம் கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது
அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டபோது, ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை மட்டும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விசாரணை அமைப்பு, சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வாகனங்களை கண்டுபிடிக்க பல சோதனைகளை நடத்தி வருகிறது.
30 வயதான மாடலும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி, பல அடுக்குமாடி குடியிருப்புகளை சொந்தமாக வைத்துள்ளார். அதற்கான பத்திரங்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக முகர்ஜியை அமலாகத்துறை கைது செய்துள்ளது. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.
அர்பிதா முகர்ஜி கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள கிளப்டவுன் ஹைட்ஸ் என்ற இடத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கிறார் என அமலாக்கத்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். வியாழக்கிழமை காலை இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்து கிலோ தங்க ஆபரணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.
இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து எதுவும் மீட்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் டோலிகஞ்சில் உள்ள டயமண்ட் சிட்டி காண்டோவில் முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் இருந்து 21 கோடி ரூபாய் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் ஏராளமான அந்நியச் செலாவணி ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஒரு காலத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, இப்போது அவருக்கு பெரும் சங்கடமாக மாறியுள்ளார். அவருக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் சிக்கியதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து பதவிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கு லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்