Gujarat: 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த லாக் அப் டெத்.. 3 விமானப்படை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை!
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் 3 விமானப் படை அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் 3 விமானப் படை அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படை கேன்டீனில் கடந்த 1995 ஆம் ஆண்டு கிரிஜா ராவத் என்பவர் சமையல் காரராக பணிபுரிந்து வந்தார். அப்போது கேன்டீனில் இருந்த 94 மதுபான பாட்டில்கள் திருடு போனது. இந்தநிலையில் இதை கிரிஜா ராவத்தான் செய்திருப்பார் என சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனியறையில் அடைத்து வைத்து மரக்கட்டை, பெல்ட் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கி விசாரணை நடத்தினர். இதில் ராவத் இறந்தார். இது தொடர்பாக விமானப்படையை சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜாம்நகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கொலை பற்றி மீண்டும் விசாரணை நடத்தக் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராவத்தின் மனைவி சகுந்தலா தேவி வழக்கு தொடர்ந்தார். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் அனுப் சூட், கே.என்.அனில் மற்றும் மகேந்திர சிங் செராவத் ஆகியோர் குற்றவாளிகள் என்பது உறுதியானது.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் போதே ஒருவர் இறந்து விட்டார். தலைமறைவான ஜே.எஸ்.சித்து தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தண்டனை பெற்ற மகேந்திர சிங் செராவத்தை தவிர மற்ற 2 அதிகாரிகளும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்