Crime: பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண்
தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அன்பழகன், சக்திவேல், அஜித், மாணிக்கம் ஆகிய நான்கு பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (44). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. கடந்த 5 ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் உள்ள வெள்ளியம்பட்டியை சேர்ந்த நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 10 க்கும் மேற்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள் காட்டூர் ஆனந்தனை ஓடஓட விரட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 4 தனிப்படை காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். ரவுடி ஆனந்தனை கொலை செய்தவர்கள் அவரின் தலையை மட்டும் துண்டித்துக்கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுள்ளனர். கழுத்தை மட்டுமே வெட்டி துண்டாக்கியுள்ளனர். உடலில் வேறு எந்த இடத்திலும் வெட்டு காயம் விழவில்லை. எனவே இந்த கொலையில் கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் ரவுடி காட்டூர் ஆனந்தனுக்கு யாரெல்லாம் எதிர் கோஷ்டியாக செயல்பட்டார்கள் என்ற பட்டியலை எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதே நேரத்தில் ஆனந்தனின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரிலும் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினரின் சந்தேக வளையத்திற்குள் இருக்கும் யாரும் தற்போது ஊரில் இல்லை. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். குறிப்பாக 10 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். ரவுடி காட்டூர் ஆனந்தன் கோஷ்டியில் இருந்த வாலிபர் ஒருவர் அயோத்தியாப்பட்டணம் ஜங்சனில் உள்ள பேக்கரி ஒன்றில் மிரட்டி மாமூல் வாங்கி வந்துள்ளார். இதுகுறித்த தகவல் ஆனந்தனுக்கு சென்றுள்ளது. அவர் அந்த வாலிபரை எச்சரிக்கை செய்து அனுப்பியதுடன், ரூ. 7.50 லட்சம் கொடுத்து பேக்கரியில் பார்ட்னராகி விட்டார். அதன்பிறகு அந்த வாலிபரால் மாமூல் வசூலிக்க முடியவில்லை. அதே போல வலசையூரில் மீன் கடையிலும் மிரட்டி மீன் வாங்கியுள்ளார். அந்த புகாரின் பேரிலும் ஆனந்தன் மிரட்டியுள்ளார். நான் இருக்கும் வரை என் ஏரியாவுக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். அந்த வாலிபர் மீதும் கொலை வழக்கு இருக்கிறது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான அவர், ஆனந்தனுக்கு எதிரான கோஷ்டிகளை ஒருங்கிணைத்துள்ளார்.
இதற்கு பக்கபலமாக அத்தனூரைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார். இந்த கோஷ்டியை சேர்ந்த 6 பேர் மீது கொலை வழக்கு ஒன்று சேலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் ரவுடி ஆனந்தன், சாட்சி சொல்வதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனால் தங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடுவார் என்ற கோபம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோஷ்டியினர் திட்டம் போட்டு இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என காவல்துறையினர் உறுதியாக நம்புகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த கோஷ்டியை சேர்ந்த அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இதில் ஆனந்தனால் கொலை செய்யப்பட்டவரின் மகனும் தலைமறைவாகி விட்டார். அவரையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை நடத்தினார்களா? எனவும் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் நீதிமன்றங்களிலும் கண் காணித்து வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அன்பழகன், சக்திவேல், அஜித், மாணிக்கம் ஆகிய நான்கு பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.