வெளிநாட்டில் வேலை! 45 லட்சம் மோசடி! கர்நாடகாவில் இருவரை தட்டி தூக்கிய நெல்லை போலீஸ்!
வெளிநாட்டில் வேலை தருவதாக 45 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்த கர்நாடாகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு மோகம்:
வெளி நாட்டிற்கு சென்றால் அதிகம் சம்பாதித்து விடலாம். நல்ல நிலைமைக்கு வந்து விடலாம் என்று வெளிநாட்டு மோகம் பலருக்கும் உள்ளது. அதில் படித்து முறையான நபர்கள் மூலம் சென்று பணியில் சேர்ந்து வாழ்வில் முன்னேற்றம் கண்டவர்கள் பலர், ஆனால் ஒரு சிலரோ எப்படியாவது வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசடி நபர்கள் கையில் சிக்கி பணத்தை தொலைத்து ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் நிற்கின்றனர். காவல்துறை, தமிழக அரசு என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இத்தகைய சம்பவம் நடந்து விடுகிறது. இந்த வரிசையில் நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு வெளிநாட்டில் எப்படியாவது வேலை வாங்கி கொடுத்து விடவேண்டும் என்ற முனைப்பில் இருந்துள்ளார்.
லட்சக்கணக்கில் மோசடி:
அப்படி வேலைக்காக இணையதளத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தனது மகனுடைய தகவல்களையும் பதிவு செய்து வைத்துள்ளார். பின் இணையதளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தொடர்பு கொண்டு மகனுக்கு வெளிநாட்டில் வேலை தருவதாக கூறியுள்ளனர். மேலும் அதற்கு VISA பெறுவதற்கும், வேலைக்காகவும் குறிப்பிட்ட ஒரு தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். பின் வள்ளியூரை சேர்ந்த நபர் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பணத்தை ரெடி செய்து அந்நிறுவனத்திலுள்ளவருக்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது அவருக்கு தாமதமாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக அவர் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் ரூபாய் 45,51,240 பணத்தை அனுப்பிய ஏமாந்தது தெரிய வந்துள்ளது.
தட்டி தூக்கிய நெல்லை சைபர் கிரைம் போலீஸ்:
மேலும் இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இவ்வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் கர்நாடகாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரமா, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், மற்றும் காவலர்கள் திவாகர், ரஞ்சித் குமார், சேக் முகமது மைதீன், செல்வதினேஷ் ஆகியோர் சேர்ந்து கர்நாடகாவிற்கு சென்று முகாமிட்டதோடு அங்கு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூர், சுகாட்டா, வெங்கட் ரெட்டி பில்டிங் முன்பு வைத்து நைஜீரியா நாட்டை சேர்ந்த அலுக்கோ ஒலுவா டோபி ஜோன்ஸ் (51), கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா, ஹலியல், சதாசிவ்நகரை சேர்ந்த பவன் கல்லப்பா மால்வி(33) என்பவரை அப்பகுதியில் வைத்து கைது செய்தனர். பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்த மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார். வெளிநாட்டில் வேலை தருவதாக 45 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்த கர்நாடகாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மோசடி நபர்களிடம் இது போன்று ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.