சாம்பிராணி புகை போட்டு நகைக்கு ஸ்வாகா... சூனியத்தை நம்பி ஏமாந்த தாயும் சேயும்!
சேலத்தில் பில்லி, சூனியத்தை எடுப்பதாக கூறி தாய், மகளிடம் சாம்பிராணி புகையை போட்டு நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் பில்லி, சூனியத்தை எடுப்பதாக கூறி தாய், மகளிடம் சாம்பிராணி புகையை போட்டு நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் 6.2. இப்படத்தில் காமெடியானாக வடிவேல் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதாவது வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என முடிவெடுத்த வடிவேல் சாம்பிராணி போடும் தொழிலை கையில் எடுப்பார். அப்போது பருத்தி மூட்டை கடை வைத்து நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவர் “யாரும் கடைக்கு வருவதில்லை; வந்தாலும் கடன் சொல்கிறார்கள்” என புலம்பிக்கொண்டிருப்பார். அந்த கடைக்கு செல்லும் வடிவேல், “இந்த சாம்பிராணி புகையை போட்டால் கடையில் கூட்டம் குவிந்து வரும்” என கூறுவார்.
அதற்கு அந்த தொழிலதிபர் “உன் வாய் முகூர்த்தம் பழிக்கட்டும். சாம்பிராணியை நல்லா போடு... போடு” என கத்துவார். இதனால் சாம்பிராணி புகையை நன்றாக போட கடை தீப்பிடித்து எரிந்து நாசமாகிவிடும். மொத்தக்கடைக்கும் ஒரு சாம்பிராணி புகையில் ஸ்வாகா செய்திடுவார் வடிவேல்.
இதேபோன்ற சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் இங்கு கடை இல்லை... அதற்கு பதிலாக நகை... ஆம் சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர், ஆயிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இதை அறிந்து கொண்ட நபர் ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து உங்கள் வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாகவும் அதை எடுக்காவிட்டால் குடும்பத்திற்கு மிகப்பெரிய கஷ்டம் வந்துவிடும் எனவும் கூறி பயமுறுத்தியுள்ளார்.
இதை நம்பிய தாயும் மகளும் எப்படியவது அதை எடுத்துவிடுங்கள் என்று அந்த போலிச் சாமியாரிடம் கூறியுள்ளனர். வீட்டினுள் அழைத்து வந்து வைத்து பூஜையும் நடத்தியுள்ளனர். இதற்காக அருகில் இருந்த கடைக்குச் சென்று வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை பழம் உள்ளிட்ட பூஜை சாமான்களை வாங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தபோது, இருவரையும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டி சொம்பில் போடச்சொல்லியுள்ளார் அந்த சாமியார். அதன்படி இவர்களும் நகையை கழட்டி போட்டுள்ளனர். சிறுது நேரம் கழித்து அந்த சாமியார் சாம்பிராணி புகை போட்டுள்ளார். வீடு முழுக்க சாம்பிராணி புகையாக மாறியுள்ளது. புகைமூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், சொம்பிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு பேப்பரில் கல்வைத்து சுற்றி இது நகைதான் அப்புறமாக பிரித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிவிட்டார்.
அதன்பின்பு பேப்பரை பிரித்து பார்த்தபோது உள்ளே வெறும் கல்தான் இருந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாய், மகள் இருவரும் உடனே வெளியே வந்து போலிச்சாமியார் அனைவரிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த சாமியார் நகையை கொள்ளையடித்துக்கொண்டு ஸ்வாகா சொல்லிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரக்ள் போலீசில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் திருடன் பச்சை நிற தலைப்பாகையுடன் நடந்து சென்றது தெரியவந்தது. இதைவைத்து போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்