Crime: சொத்துக்காக அண்ணனை கடத்தி தலைகீழாகத் தொங்க விட்ட தங்கை: பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது!
சொத்துக்காக சினிமா இயக்குனரான தனது அண்ணனையே தங்கை கடத்திய சம்பவத்தில் பாஜக நிர்வாகியான அவரது மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது 52), சினிமா துணை இயக்குனரான இவரது தங்கை அம்பிகா பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவரான வேலுச்சாமி என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர்களது மகன் கோகுலக்கண்ணன் (வயது 25) நகர பாஜக விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், தங்கதுரையின் பெயரில் உள்ள பூர்வீக சொத்தை தனக்கு எழுதி தரும்படி அம்பிகாவும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து சிவக்குமாரிடம் கோரி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இது தொடர்பாக இருவருக்குள்ளும் மோதல் வெடித்த நிலையில் தங்கதுரை பல்லடம் காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “எனது தங்கையும் அவரது கணவரும், பாஜக பிரமுகரான அவர்களது மகன் கோகுலக்கண்ணனும் என் பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதித் தரும்படி கேட்டு வந்தனர்.
ஆனால் நான் மறுத்துவிட்டேன். தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி பல்லடம் சேடபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் தாராபுரம் பகுதியில் தோட்டம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதைப் பார்க்க வரும்படியும் என்னிடம் கூறினார். அதன்படி, நான் அங்கு சென்றபோது அங்கு இருந்த எனது மைத்துனர் வேலுச்சாமி. அவரது மகன் கோகுலக் கண்ணன் உள்ளிட்ட சிலர் என்னை அடித்து உதைத்து கைகளை பின்புறமாக கட்டியதோடு வாயில் துணியை வைத்து அடைத்தனர்.
அதன்பின் பல்லடம் அறிவொளி நகரில் உள்ள வேலுச்சாமியின் வீட்டுக்கு என்னை கூட்டிச் சென்றனர். அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து மீண்டும் சொத்துக்களை எழுதி தரும்படி வற்புறுத்தி சரமாரியாக அடித்தனர். ஆனால் நான் மறுக்கவே தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டனர். அவர்களது சித்ரவதை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் கையெழுத்து போட்டுத் தர ஒப்புக் கொண்டேன்.
அதன்பின் என்னை அவிழ்த்துவிட்டு 21 பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். மேலும் நான் அணிந்திருந்த 5 பவுன் தங்க பிரஸ்லேட், 7 பவுன் சங்கிலி, ஒண்ணே கால் பவுன் மோதிரம், ரொக்க பணம் பல லட்சம், ரேஷன் கார்டு, ஏடிஎம் கார்டு, பான் கார்டு மற்றும் சொத்து பத்திரங்கள் என அனைத்தையும் பறித்துக்கொண்டனர்.
எனது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயங்க வைத்தனர். மயக்கம் தெளிந்து எழுந்தபோது மீண்டும் மதுவை குடிக்க வைத்தனர். மறுமுறை நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது பெங்களூருவில் உள்ள மனநலக் காப்பகத்தில் இருந்தேன். அங்கிருந்தபடியே எனது வளர்ப்புத் தாய் வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன்.
அவர்கள் வந்து என்னை மீட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் அம்பிகா முன்னதாக தலைமறைவான நிலையில், பல்லடம் காவல் துறையினர் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி, அம்பிகா - வேலுச்சாமி ஆகியோரது மகனும் பாஜக பிரமுகருமான கோகுலக் கண்ணன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அஸ்ரப் அலி (30), ரியாஸ்கான் (29), சாகுல் அமீது (35) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.