Crime: பூட்டை வீட்டை நோட்டமிட்டு பட்டப்பகலில் 70 சவரன் நகைகள் கொள்ளை - நெல்லையில் துணிகரம்
மாநகரில் இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது அது போன்ற சம்பவங்களும் காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் கடந்த ஓராண்டாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நெல்லை மாநகரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி தியாகராஜ நகர். தியாகராஜ நகர் 12வது தெற்கு தெருவில் வசிப்பவர் நமச்சிவாயம். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னம்மாள் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பொன்னம்மாள் பள்ளிக்கூடத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். நமச்சிவாயமும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின் சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருள்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 15,000 ரூபாய் ரொக்க பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தும், அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாநகரில் பிரதான பகுதியாக விளங்குகின்ற தியாகராஜ நகரில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகரில் இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது அது போன்ற சம்பவங்களும் காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் கடந்த ஓராண்டாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மாநகரில் பட்டப்பகலில் ஆளில்லாதை நோட்டமிட்டு பூட்டிய வீட்டிற்குள் புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..