Crime: கந்துவட்டி தகராறு: வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 3 பேர் கைது!
தச்சம்பட்டு அருகே கந்துவட்டி தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து மணலூர் பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் நவம்பட்டு அருகே உள்ள அங்கன்வாடியிடம் ஒரு இளைஞர் பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக தச்சம்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் ஆய்வாளர் கமல்ராஜ், துணை ஆய்வாளர் சவுந்தரராஜன், தனிப்பிரிவு மற்றும் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
உயிரிழந்து கிடந்த இளைஞர் யார்? என்பது அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் தேவனூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரின் மகன் அருள்குமார் வயது (37) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் அருள்குமாருடைய நண்பர்களிடம் அருள்குமாருக்கு முன்பகை உள்ளதா என விசாரணை நடத்த தேவனுருக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு நண்பர் மாமலைவாசன் வயது (31) தலைமறைவாகியுள்ளார். தலைமறைவான மாமலைவாசனை காவல்துறையினர் கண்டு பிடித்து அவருடைய கூட்டாளிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அருள்குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடி ஆத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாமலைவாசன் என்பவருக்கும் கந்து வட்டி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மாமலைவாசன் அதற்காக 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் சென்று அருள்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு அருண்குமார் மணலூர்பேட்டை பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதை அறிந்த மாமலைவாசன் மற்றும் அவரது நண்பர்களான தேவனூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் வயது (37), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிருவரங்கம் பகுதி சேர்ந்த சூர்யா வயது (22) ஆகிய 3 நபர்களும் அருள்குமரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அருள்குமார் மணலூர்பேட்டை பகுதியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாமலைவாசன் பின்னால் வேகமாக துரத்தி அருள்குமாரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருள்குமாரை இளங்கோவன், சூர்யா, மாமலைவாசன் ஆகிய 3 நபர்களும் சேர்ந்து கத்தியால் சராசரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனையடுத்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்திகளை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஏரிகளில் வீசிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து 3 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார். மேலும் அவர் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்று விசாரணை மேற்கொண்டார். சினிமா படப்பாணியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.