Crime: டி.ஜி.பி. பெயரிலே போலீசாரிடம் பண மோசடி...! நைஜீரிய நபர் உள்பட 2 பேர் கைது..!
டி.ஜி.பி. பெயரில் காவலரிடம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டி.ஜி.பி. பெயரில் மோசடி:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12வது பட்டாலியன் போலீஸ் கமாண்டண்டாக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் வந்தது. அதில் தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசுக்கூப்பன் விழுந்திருப்பதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் மற்றும் புகைப்படத்துடன் தகவல் வந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பல லட்ச ரூபாய் பரிசாக அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதனை உண்மை என நம்பிய கார்த்திகேயன் தனது வங்கி கணக்கில் இருந்து முன்பணமாக சிறிது தொகையை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து மீண்டும் அதே குறுந்தகவல் வாட்ஸ் அப் மூலம் வந்துள்ளது. மேல் அதிகாரி தான் அனுப்புகிறார் என எண்ணிய கார்த்திகேயன் அவ்வப்போது 7 அரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார். மீண்டும் மீண்டும் என 10 முறைக்கு மேல் அதே குறுந்தகவல் வந்து கொண்டிருப்பதை கண்டு ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் மூலம் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து பார்த்த நிலையில் குறுந்தகவல் பொய்யானது என தெரிய வந்தது.
மோசடி:
இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நவீன தொழில் நுட்ப உதவிகளுடன் வெளி மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிக்கு இருவர் செல்போன் சிம் கார்டு வாங்கி கொடுத்து உதவியது தெரியவந்தது, அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (32) மற்றும் வினைகுமார் (38) ஆகிய இருவரை ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக கைது செய்திருந்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை தொடர்ச்சியாக தேடி வந்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவர்
தொடர் விசாரணையின் பேரில் பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்று ஒரு மோசடி நடைபெற்றது தெரியவந்தது.. எனவே அந்த வழக்கில் கிடைத்த ஆவணங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் கார்த்திகேயனிடம் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) மற்றும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32) என்பதும் அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப உதவியோடு இது போன்று நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் உள்பட பலரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதும் தெரியவந்தது.
கைது:
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று ஸ்டான்லி மற்றும் ராம்சன் சோகாசரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள் சிம்கார்டுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டாலும் கூட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் அவர்களை விரைந்து கைது செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு நெல்லையில் அதிகாரியிடம் பல லட்சம் மோசடி செய்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்..