Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Paliyal Case: ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Pollachi Paliyal Case: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கி கைதான 9 பேரில் ஒருவருக்கு கூட இதுவரை ஜாமின் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது. இந்த நிகழ்வை வீடியோ எடுத்து மிரட்டி துன்புறுத்திய அவலமும் நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், சபரிராஜன் (32), திருநாவுக்கரசு (34), சதீஷ் (32), வசந்தகுமார் (30), மணிவண்ணன் (32), பாபு (33), ஹெரன்பால் (32), அருளானந்தம் (38), மற்றும் அருண்குமார் (32), ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 ஆண்டுகளாக சிறை:
கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இதுவரை ஜாமின் கூட வழங்கப்படாமல், கடந்த 6 ஆண்டுகளாகவே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு மே மாதமே, குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீதும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கொரோனா காலத்தில் இந்த விசாரணை முடங்கிய நிலையில், கட்டுப்பாடுகள் தளர்ந்த பிறகு மீண்டும் வேகமெடுத்தது. நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு இன்கேமரா மூலம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன்படி சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்தன. அதன் விளைவான நீதிபதி நந்தினி தேவி இன்று, பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் தீர்ப்பு அளிக்க உள்ளார்.
பலத்த பாதுகாப்பு:
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்கள் செய்யப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும்? அல்லது அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காலை 10 மணியளவில் தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக மீதான கரை:
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அம்பலமானபோது தமிழ்நாட்டில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தான் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் அருள் என்பவர் அதிமுகவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டவர் என்பதும், அக்கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை குறிப்பிட்டு “”அதிமுகவின் பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் கடுமையாக விமர்சித்து வருவது குறப்பிடத்தக்கது.






















