கோவையில் பரபரப்பு... பிரபல நகைக்கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை
நேற்றிரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் நகைக்கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிக்க வணிக பகுதியான இப்பகுதியில் பல்வேறு நிறுவனங்களின் கிளைகள் இயங்கி வருகின்றன. நூறடி சாலையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் இன்று காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஊழியர்கள் கடையினுள் சென்று பார்த்த போது, நேற்றிரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது குறித்து கடையின் உரிமையாளருக்கும், காவல் துறையினருக்கும் கடை ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் நகைக்கடையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சண்முகம் நகைக்கடையில் நேரில் ஆய்வு செய்தார். 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் கடையில் நகைகள் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பது முழுமையாக தெரியவில்லை. இன்னும் கூடுதலாக நகைகள் கொள்ளை போயிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடையில் முழுமையாக கடை ஊழியர்கள் ஆய்வு செய்த பின்னரே எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறதுமேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரின் முக்கிய பகுதியில் பாதுகாப்பை மீறி நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.