முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த இன்ஸ்டா காதல் ஜோடி; விரட்டி பிடித்த பொது மக்கள்
இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஜாலியாக வாழவும், பல இடங்களுக்கு ஊர் சுற்றவும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (வயது 76). இவரது மனைவி ராஜம்மாள் (வயது 67) இவர்களுக்கு மகன் மற்றும் மகள் இருவர் உள்ளனர். மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகளை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். வயதானவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜம்மாள் தன் கணவருக்கு உணவு கொடுத்து விட்டு மருமகள் வருவாள் எனக் கூறி விட்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனிடையே நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆண், பெண் இருவர் வந்து வீட்டில் தனியாக வெளியில் அமர்ந்து இருந்த பெரிய ராயப்பனிடம் தண்ணீர் கேட்டு உள்ளனர். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற இருவரும் அவரை மடக்கி பிடித்து இரு கைகளையும் கட்டி, வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம், நகைகளை தேடியுள்ளனர். பின்னர் இரண்டே கால் பவுண் தங்க நகைகள் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறி உள்ளனர்.
அப்போது முதியவரின் மகன் பாபு சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்பகுதியில் இருந்து இருவர் சந்தேகிக்கும் வகையில் வருவதை பார்த்துள்ளார். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்ட பொழுது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து நழுவி தப்பியோட முற்பட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் இருவரையும் பிடிக்க முற்பட்டுள்ளார். அவரை தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து பாபு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
உடனடியாக அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து இருவரையும் விரட்டி உள்ளனர். ஒரு புதரில் பதுக்கிய பெண்ணை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்ட நபர் தானாக பொதுமக்களிடம் வந்து சேர்ந்தார். இதையடுத்து இருவரையும் அடித்து உதைத்த பொதுமக்கள் இருவரது கைகளை கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் திருச்சியை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகள் சென்பகவள்ளி (24) என்பதும், எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. உடனிருந்த நபர் விருதுநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (23) என்பதும், பி.இ. பட்டதாரியான இவர் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர். இருவரும் உல்லாசமாக வாழவும், பல இடங்களுக்கு ஊர் சுற்றவும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் கிராம பகுதியை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்து குறிப்பிட்ட வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்து வந்து உள்ளனர். கொள்ளை அடிக்க யூடியூப் பார்த்து அதற்கு சில கூர்மையான ஆயுதங்களான சுத்தி, கயிறு, பிளாஸ்டர் உள்ளிட்டவை கொண்டு கொள்ளை அடித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து பெரியராயப்பன் வீட்டில் கொள்ளையடித்த தங்க நகை, பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தினேஷ், செண்பகவல்லி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல அண்மையில் கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளில் முதியவர்களை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் சூலூர் கொள்ளையில் சரோஜினி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்களில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்