பள்ளியில் இருந்து குதித்து 8ம் வகுப்பு மாணவி தற்கொலை: சக மாணவர்கள் கிண்டலா? அதிர்ச்சி தரும் காரணம்
பள்ளியில் வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார்.

மகாராஷ்டிராவில் 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகமாணவர்கள் கிண்டல் செய்ததால் மாணவி இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஜலானாவில் உள்ள தனது பள்ளி கட்டிடத்திலிருந்து சிறுமி குதித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் இந்த முடிவுக்கு சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் ஜல்னா நகரில் உள்ள தனது பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். மஸ்தகாட்டைச் சேர்ந்த ஆரோஹி தீபக் பிட்லா என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி, சி.டி.எம்.கே பள்ளியின் மாணவி ஆவார்.
பள்ளி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "பள்ளியில் வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆரோஹி 3ஆவது மாடியில் இருந்து குதித்தார். ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் உடனடியாக அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளை கிண்டல் செய்ததாக தந்தை புகார்
தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ஆரோஹியின் தந்தை தீபக் பிட்லா, இந்த சம்பவம் குறித்து பள்ளியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரோஹி அன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், தனது மகள் சமீபத்தில் வகுப்பில் சில சிறுவர்கள் தன்னை கேலி செய்ததாக புகார் அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். "நான் அவளிடம் ஆசிரியர்களிடம் தெரிவிக்கச் சொன்னேன், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
ஆரோஹியின் கல்வித் திறன் குறைவாக இருந்ததால், ஆசிரியர்கள் அவரது பெற்றோரை பள்ளிக்கு அழைத்தனர். அதே பள்ளியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் தனது பாட்டியிடம், தனது படிப்பு குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கக்கூடும் என்றும், இது அவரது மன அழுத்தத்தை அதிகரித்திருக்கலாம் என்றும் அவர் அஞ்சினார்.
சந்தேகத்திற்குரிய தற்கொலைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக சதார் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சந்தீப் பாரதி தெரிவித்தார். மேலும், விபத்து மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்து, துன்புறுத்தல் மற்றும் கல்வி அழுத்தம் உள்ளிட்ட அனைத்து சாத்தியமான கோணங்களையும் ஆராய்ந்து வருவதாக ஆய்வாளர் கூறினார்.
பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஆசிரியர்களின் துன்புறுத்தலால் டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு சிறுவன் குதித்து தற்கொலை செய்து கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.






















