Selvam Murder Case : திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! பிரபல ரவுடி மற்றும் திமுக பிரமுகர் கைது
தி.மு.க பிரமுகரான மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் நான்கு பேர் கைது. இதுவரை 13 பேர் இவ்வழக்கில் கைதாகியுள்ளனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 188-வது திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வத்தை கூலிப்படை கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன் உள்பட இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்படை கும்பல் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ், கிஷோர் குமார், நவீன், சஞ்சய், புவனேஷ்வர் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.விசாரணையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் முருகேசன் (30) என்பவர் சொன்னதால்தான் திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்தோம். இதன் பின்னணியில் யார் என்று எங்களுக்கு தெரியாது என தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதமாக போலீசார் தேடிவந்த நிலையில் அம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த முருகேசனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். மேலும் ரகசிய இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
வாக்குமூலமாக முருகேசன் கூறியதாக போலீசார் கூறுகையில், மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் யாருக்கு சொந்தமானது என தெரியாமல் கேட்பாரற்று 4 கிரவுண்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை மதுரை பகுதியில் உள்ள பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் நிலத்தை எடுக்க முயற்சித்தனர். அப்போது செல்வம் இடைஞ்சலாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் செல்லவத்திற்கு தெரிந்த கட்டுமான நிறுவனம் பெயர் பலகை வைத்தது. அப்போது முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் இந்த இடத்தை நீ எடுத்துக்கொண்டு விற்று அதில் தங்களுக்கு தலா ரூ.50 லட்சம் தந்ததால் போதும், மீதமுள்ள ரூ.1 கோடியை நீ எடுத்துக்கொள் என கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த பழைய பெயர் பலகையை அகற்றிவிட்டு புதிய பலகையை வைத்தேன். இதற்கு செல்வம் இடைஞ்சல் செய்துகொண்டு இருந்தார். இதனால் இடைஞ்சலாக இருந்த செல்வத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த சமயத்தில் தேர்தல் அறிவித்தனர். சென்னை மாநகராட்சி 188-வது வட்டத்தில் நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிட மடிப்பாக்கம் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமானோர் சால்வை அணிவிப்பதுபோல் சென்றதை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்க சால்வை அணிவிப்பதுபோல் சென்று கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலக எழுத்தர் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயமுருகன் (42), 188-வது வார்டு திமுக பிரமுகர் குட்டி (எ) உமா மகேஸ்வரன் (43), திமுக மீனவர் அணியை சேர்ந்த சகாய டென்ஸி (55), மற்றும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ரவி(எ) ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.