அதிகாரிகளை அலறவிட்ட பெண்.. ஹை குவாலிட்டி கஞ்சா - நடந்தது என்ன?
Chennai News: போதை பொருளை கடத்தி வந்த இளம் பெண்ணை, சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
![அதிகாரிகளை அலறவிட்ட பெண்.. ஹை குவாலிட்டி கஞ்சா - நடந்தது என்ன? Chennai International Airport from Thailand lady smuggled 3 kg Ganja worth 2 crores tnn அதிகாரிகளை அலறவிட்ட பெண்.. ஹை குவாலிட்டி கஞ்சா - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/a4869e58823879717ad3d18bd9788f1e1732350963978739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.2 கோடி மதிப்புடைய, பதப்படுத்தப்பட்ட, உயர்ரக கஞ்சா போதைப்பொருள் 3 கிலோ, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
சிக்கிய பெண் பயணி
இந்தநிலையில் சுமார் 30 வயதுடைய பெண் பயணி ஒருவர், நவநாகரீக உடைகளில், உயர் வர்க்கத்து பெண்ணை போன்ற ஒருவர், சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, மறுநாளே இந்த விமானத்தில், சென்னைக்குதிரும்பி வந்தார். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
உயர்தர கஞ்சா
இதை அடுத்து பெண் சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை, தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அதோடு அந்த பெண் பயணியின் உடைமைகளையும் சோதித்தனர். அப்போது அந்தப் பெண் பயணியின் பையில், பார்சல் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பார்சலை பிரித்து பார்த்த சுங்க அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பார்சலில், மிகவும் உயர்ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கஞ்சா போதை பொருளை, உயர் வர்க்கத்தினர், செல்வந்தர்கள், வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவதும் தெரிய வந்தது.
தலையை சுற்ற வைக்கும் மதிப்பு
இதை அடுத்து அந்த கஞ்சா பார்சலை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பார்சலில் சுமார் 3 கிலோ, உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்பின்பு சுங்க அதிகாரிகள் கஞ்சா கடத்தல் பயணியான, இளம்பெண்ணை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து, இந்த கஞ்சா போதை பொருளை வேறு யாரோ ஒருவர் கடத்திக் கொண்டு வந்து, தாய்லாந்து நாட்டில், இந்த பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது. மேலும் இந்த பெண், போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது.
சென்னை விமான நிலையத்தில், ரூ.2 கோடி மதிப்புடைய, உயர் ரக கஞ்சா போதை பொருள் 3 கிலோவுடன், இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)