Crime : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?
தாம்பரத்தில் திருமணமாகிய ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் 17 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது ரங்கராஜபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். அவருக்கு வயது 25. இவர் முடிச்சூர் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா. அவருக்கு வயது 28.
இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவி இருவரும் வேறு, வேறு நகை கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அபிநயா ஒருநாள் மட்டுமே சென்ற நிலையில் பின்னர் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடராஜனின் பெற்றோர் மற்றும் தம்பி வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் புதுமணத் தம்பதிகளான நடராஜன் மற்றும் அபிநயா மட்டுமே இருந்தனர். அப்போது, நடராஜன் சிறிய வேலை காரணமாக முடிச்சூர் சென்றுள்ளார். பின்னர், தனது வேலையை முடித்துவிட்டு நடராஜன் வீடு திரும்பியபோது மனைவி அபிநயாவை காணவில்லை. வீட்டில் சுற்றிப் பார்த்தபோதும் அபிநயாவை காணவில்லை.
அப்போது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பணம் மற்றும் நகை மாயமாகி இருந்தது. பீரோவில் இருந்த நடராஜனின் தாய்க்கு சொந்தமான 17 பவுன் தங்க நகை, சீட்டு பணம் 20 ஆயிரம் மாயமாகியிருந்தது. இதனால், நடராஜன் அதிர்ச்சியடைந்தார். அதிர்ச்சியில் உறைந்த நடராஜன் அவரது மனைவி அபிநயாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர்தான் அபிநயா நகை மற்றும் பணத்துடன் மாயமாகியிருப்பது உணர்ந்து நடராஜன் மன வேதனை அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. நடராஜனும், அபிநயாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அபிநயாவை திருமணம் செய்து கொள்ள நடராஜன் கேட்டபோது, அதற்கு சம்மதம் தெரிவித்த அபிநயா தான் வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறியதுடன், இங்கு தனியாக வசித்து வருவதாகவும் நடராஜனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவில் தெருவில் தன்னுடைய பெற்றோர்கள் முன்னிலையில் நடராஜன் அபிநயாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் அபிநயாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பின்னர், நடராஜன் வீட்டில் நடராஜனின் பெற்றோர்கள் மற்றும் தம்பியுடன் அபிநயா அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
மேலும், அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றியுள்ளனர். அதில், மதுரை முகவரி உள்ளது. இந்த முகவரி போலி முகவரியா..? அல்லது உண்மை முகவரியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அபிநயா திட்டமிட்டு காதல் மோசடியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் இதில் நிகழ்ந்துள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.