தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்.. 14 கிலோ, ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை
Hydroponic Cannabis: சென்னைக்கு தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயரக, ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்.
சென்னை பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த உயர்ரக கஞ்சாவை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, பயணியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரகசிய தகவல்
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதோடு அவர்களுக்கு உதவியாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளும் செயல்பட்டனர்.
இந்தநிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்துக்கு இடமான சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு, சுற்றுலாப் பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, மறுநாளே உடனடியாக சென்னைக்கு திரும்பி வந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா
இதனைத்தொடர்ந்து அவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய சூட்கேசில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்து, அதை உடைத்து பார்த்தபோது, அதனுள் 3.6 பதப்படுத்தப்பட்ட, உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.3.6 கோடி.
இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கஞ்சா கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை விசாரித்த போது, அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலில், குருவியாக வேலை செய்கிறார் என்று தெரிந்தது. சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் சென்னையில் எங்கு இருக்கிறார்கள்? என்று விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், இதை போல் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னை சேர்ந்த பெண் பயணி ஒருவர் 2.8 ஒரு கிலோ மதிப்புடைய ஹைட்ரோ போனிக் கஞ்சா கடத்தி வந்து கைதானார். இதை அடுத்து இம்மாதம் 16ஆம் தேதி ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர் ரக பதப்படுத்த ப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
14 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா
இந்நிலையில் தற்போது மூன்றாவது சம்பவமாக இந்த சென்னை பயணி ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில், மூன்று சம்பவங்களில் ரூ.14 கோடி மதிப்புடைய 14 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு பெண் உட்பட 3 கடத்தல் குருவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.