இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து நபர்.... தூத்துக்குடியில் சிக்கியது எப்படி..? - அதிர்ச்சி தகவல்
கோர்ட்டில் ஆஜரான ஜோனதன் தோர்னிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் தமிழில் இருந்ததால், தனக்கு ஆங்கிலத்தில் நகல் வேண்டும் என்று ஜோனதன் தோர்ன் கேட்டு உள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்துள்ளார். விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது 47) என்பது தெரியவந்தது.
இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார். அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி இருந்தாராம். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இதற்காக கடற்கரையில் நின்றபோது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி க்யூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டு உள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் இருந்து உள்ளார். பின்னர் பரோலில் வெளியில் வந்து உள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.
இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,படகு மூலம் இலங்கைக்கு சென்று போதைப்பொருட்களை வாங்குவதற்காக தூத்துக்குடி வந்திருந்ததும், இதற்காக வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவரின் உதவியை நாடுவதற்காக அவர் ஹோட்டலில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தனியார் ஹோட்டலில் ஜொனாதன் தங்கியிருந்த அறையிலிருந்து இரண்டு விலையுயர்ந்த செல்போன்கள், இந்திய பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், துபாய் நாட்டில் செல்லத்தக்க வகை திராம்ஸ், இலங்கை, நேபாளம், வங்காள தேச நாட்டு பணம் இதுதவிர இங்கிலாந்து நாட்டின் இரண்டு பாஸ்போர்ட்டு, இந்திய நாட்டு பாஸ்போர்ட்டு ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்திய நாட்டின் கோவா கடற்கரை வழியாக சர்வதேச நாடுகளுக்கு போதைபொருள் கடத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இந்திய நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு கியூ பிரிவு போலீஸ் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜோனதன் தோர்னுக்கு ஜாமீன் கிடைத்தாலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் தொடர்ந்து ஜெயிலில் உள்ளார்.
மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு கியூ பிரிவு போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன்படி கடந்த 3-ந் தேதி தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை கியூபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தாக்கல் செய்தார். அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜரான ஜோனதன் தோர்னிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் தமிழில் இருந்ததால், தனக்கு ஆங்கிலத்தில் நகல் வேண்டும் என்று ஜோனதன் தோர்ன் கேட்டு உள்ளார். இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகலை கியூ பிரிவு போலீசார் தயார் செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.