Crime: என் காதலி தான் வேண்டும்.. 2வது மனைவி, பெட்ரோல் ஊற்றி, சிலிண்டரை வெடிக்கச் செய்து கொன்ற கணவன்
Crime: காதலியை திருமணம் செய்வதற்காக இரண்டாவது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை, பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.

Crime: இரண்டாவது மனைவியை பெட்ரோல் ஊற்றி, கேஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து கொடூரமாக கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்:
பீகாரைச் சேர்ந்த நபர் தனது காதலியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதற்கு அவரது இரண்டாவது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவி மீது பெட்ரோலை ஊற்றி, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து மனைவியை கொடூரமாக கொன்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றி இரண்டாவது திருமணம்:
நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார், 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அதற்கு பிறகு தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் சுனிதா மற்றும் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தாலும், சுனிதாவின் குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ தொடங்கிய நிலையில், தம்பதிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளன.
காதலியை திருமணம் செய்ய திட்டம்:
இந்த சூழலில் தான் தனது காதலியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக விகாஸ் தெரிவித்துள்ளார். இதனால், சுனிதா வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கு இடையே அவ்வப்போது சண்டையும் வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான மனஸ்தாபம் அதிகரிக்க, சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்கே சென்றுள்ளார். கடந்த மாதம் தொடங்கிய துர்கா பூஜைக்கு முன்பாக மாமியார் வீட்டிற்கு சென்ற விகாஸ், தனது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்து பேசி சமாதானம் செய்துள்ளார். அதன்படி சுனிதா கணவன் வீட்டிற்கும் சென்றுள்ளார்.
இரண்டாவது மனைவி கொடூரக் கொலை:
இந்நிலையில் தான் சனிக்கிழமை காலை 1 மணியளவில், சுனிதாவிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். அப்போது, கணவன் விகாஸ் என் மீது பெட்ரோலை ஊற்றி முற்றத்தில் அடைத்து வைத்ததோடு, வீட்டின் கேஸ் சிலிண்டர் வால்வுகளை திறந்து தீக்குச்சியையும் கொளுத்தி போட்டார். நான் இனி பிழைக்க மாட்டேன்” என சுனிதா கூறியதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தப்பித்து ஓடிய கணவன் குடும்பத்தார்
சுனிதாவின் தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த நேரத்திலேயே விகாஸ் குமாரின் குடும்பத்தினர், அந்த பெண்ணின் உடலிற்கு இறுதி மரியாதை செய்து தகனம் செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். ஆனால், சுனிதாவின் குடும்பத்தினரை கண்டதும் அவர்கள் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய விகாஸ் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர்.





















