டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பாட்னாவின் மசௌரியில் ஒரு டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவின் மசௌரியில் ஒரு டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் மசௌரியில் பகுதியில் இருந்து டெம்போ ஒன்று நேற்று இரவு கிட்டதட்ட 7 லிருந்து 10 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு வந்தது. நூரா பாலம் அருகே டெம்போ வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி டெம்போ மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த மற்ற பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து சரியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.
மசௌரி காவல் நிலையத்தின் அதிகாரி விஜய் குமார் கூறுகையில், "நூரா பாலம் அருகே ஒரு டெம்போவும் ஒரு லாரியும் மோதியது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த மோதல் நடந்தது. ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்" என்று தெரிவித்தார்.
இதேபோல், பீகாரில் வேறு ஒரு விபத்து நடைபெற்றது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப், கைமூர் மாவட்டத்தில் ஒரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
பீகாரின் கைமூர் மாவட்டத்தின் சில்பிலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கைமூர் துணைப் பிரிவு காவல் அதிகாரி கூறுகையில், "ஜமுய் நோக்கிச் சென்ற ஜீப், நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மற்றொருவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்," எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

