Crime: 15 நிமிடங்களில் ஏடிஎம் கொள்ளை.. வேலையில்லாத இளைஞர்களுக்கு முன்னுரிமை.. 3 மாத பயிற்சி கொடுத்த “ஏடிஎம்” பாபா
லக்னோவில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
லக்னோவில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுவாக வங்கிகள் சார்பாக மக்கள் எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஏடிஎம் சென்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா,அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே தினம்தோறும் ஏடிஎம் கொள்ளை, திருட முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னோ - சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தைத் திருடியதாக 4 இளைஞர்களை அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) கைது செய்தனர். அவர்களிடம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தியபோது அதில் நீரஜ் என்பவர், தான் ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிப்பது பற்றி கற்றுக் கொண்டதாகவும், ஒருவர் கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து ரூ. 9.13 லட்சம் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 3 பேரும் ஒரே நபரிடம் பயிற்சி பெற்றதும் தெரிய வந்தது. இவர்கள் பிடிபடுவதற்கு முன்னதாக இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 1000 சிசிடிவி காட்சிகளையும், லக்னோவை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இவர்களுக்கு தலைவன் ஒருவன் இருக்கிறது தெரிய வந்ததும் யார் அந்த நபர் என்பதை அறிந்து கொள்வதில் போலீசாருக்கு ஆர்வம் ஏற்படுள்ளது.
“ஏடிஎம் பாபா”
பீகாரின் சப்பராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் தன்னை அறிந்த வட்டாரங்களில் “ஏடிஎம் பாபா” என அன்போடு அழைக்கப்படுபவர். இவர் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து 15 நிமிடங்களில் ஏடிஎம் சென்டர்களில் திருட சொல்லி கொடுத்து வந்துள்ளார். 3 மாத பயிற்சியில் எப்படி எடிஎம் மையத்தை அணுக வேண்டும், அடையாளங்களை மறைக்க வேண்டும், ஏடிஎம் மிஷினை உடைத்து 15 நிமிடங்களில் பணத்தை எடுக்க வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
3 மாத பயிற்சிக்குப் பிறகு 15 நாட்கள் நேரடி ட்ரெயினிங் நடத்தப்படுகிறது. இதில் 15 நிமிடங்களுக்குள் வேலையை முடிக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஏடிஎம் பாபா நாடு முழுவதும் இருந்து வேலை இல்லாத இளைஞர்களை இந்த கொள்ளை சம்பவத்தில் பயிற்சி கொடுத்து ஈடுபடுத்தியது தெரிய வந்தது. நாடு முழுவதும் இந்த கும்பலால் கடந்த ஒரு வருடத்தில் இதுபோன்ற 30க்கும் மேற்பட்ட ஏடிஎம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.