Anbil Mahesh Press Meet: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் : தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த விளக்கத்தை நாங்கள் பதிவு செய்து வைத்துள்ளோம். தஞ்சை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட விடுதி வார்டன், காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றியும், பள்ளியில் இருந்து படித்து வெளியேறிய முன்னாள் மாணவ, மாணவிகளிடமும் கருத்துக்களை கேட்டுள்ளோம்.
பல அமைப்புகள் பல காரணத்தை கூறியதால், நாங்களும் அந்த கருத்தின் அடிப்படையில் கேட்டதில் இதுவரை யாரும் அதுபோன்று கருத்துக்களை கூறவில்லை. ஒரு பிரச்சினை என்று வந்தால் உரிய அதிகாரியிடம் கூறி அதற்கு முழுமையாக தீர்வு காணும் பணியில் பள்ளி நிர்வாகம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து எதையும் மறைக்க வேண்டாம்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் எதுவாக இருந்தாலும் மாணவியின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அவர்கள் சொல்லும் காரணங்களாக இருந்தாலும் சரி, பிற காரணங்களாக இருந்தாலும் சரி இழந்த உயிரை மீட்டெடுக்க முடியாது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு காவல்துறைக்கான இரும்புக்கரத்தை என்றைக்குமே வழங்கும். “
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மாணவியை மதம்மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி உயிரிழந்ததாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.
ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் அதுபோன்ற எந்த வித குற்றச்சாட்டுகளும் பெறப்படவில்லை என்று கூறினார். அதேசமயத்தில், மாணவியை கொடுமைப்படுத்தியதற்கான குற்றச்சாட்டில் விடுதி வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்