இரிடியம் மோசடி நபரிடம் சிக்கி ரூ.1.81 கோடி இழந்த நடிகர் விக்னேஷ்.. நடந்தது இதுதான்..
இரிடியம் மோசடி நபரிடம் சிக்கி ரூ.1.81 கோடி இழந்த நடிகர் விக்னேஷ் போலீசாரிடம் புகார்.
இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடியை இழந்த சினிமா திரைப்பட நடிகர் விக்னேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, நடிகர் விக்னேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், சினிமா உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடித்திருக்கிறேன். இப்போது சொந்தமாக தொழில் செய்து வருகிறேன்.
தான் நடத்திவரும் கடையின் வாடகைதாரர் ராம் பிரபு என்பவர், இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்கள் மற்றும் அதுதொடர்பான ரகசிய கூட்டங்களை நடத்தி அதில் தான் கலந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
சட்டபூர்வமாகவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடனும் இந்த இரிடியம் தொழிலை செய்து வருவதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்தால் 500 கோடியாக லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்திருக்கிறார். இதனை நம்பிய நடிகர் விக்னேஷ் 1.82 கோடி ரூபாயை ராம்பிரபுவிடம் கொடுத்ததாகவும், லாபத் தொகையை கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பி அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அவரை பற்றி விசாரணை செய்த போது இதே போன்று ஏராளமான நபர்களிடம் அவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததாகவும் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தான் இழந்த தொகையை மீட்டுத்தருமாறு சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் நடிகர் விக்னேஷ்.
இரிடியம் என்றால் என்ன?
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. ஆண்டிற்கு மூன்று டன் தான் வெட்டி எடுக்கப்படுகிறது. 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான வெப்பத்தைத் தாங்கக்கூடிய உலோகம்.
இதன் உருகுநிலை 2466 ° செல்சியஸ் (39 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு சமம்) என்ற உயர்ந்த அளவில் இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. இரிடியம் இயற்கையில் பிளாட்டினம், அசுமியம் ஆகியவற்றுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இது அதிகம் அரிதான பொருட்களில் ஒன்று.
ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில உருண்டையின் மீது ஒரு பெரிய விண்கல் வந்து மோதியதாகவும் அந்த விண்கல்லில் இந்த இரிடியம் கூடுதலான விகிதத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. லத்தீன் மொழியில் இதற்கு வானவில் என்ற அர்த்தம் உண்டு.
எங்கு கிடைக்கிறது? அதன் தன்மை என்ன?
இந்த இரிடியம் எளிதாக பூமியில் கிடைப்பதில்லை. பிளாட்டினம் கிடைத்தாலும், அதில் 1000-ல் ஒரு பங்கு மட்டுமே இரிடியம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 டன்கள் மட்டுமே இரிடியம் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது.
இதனால், கிடைப்பதற்கரிய இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் அமோக வரவேற்பு இருக்கிறது. தாமிர கனிமத்திலிருந்தும் இந்த இரிடியம் கிடைக்கிறது. பல நூறு ஆண்டுகள் பழைமையான தாமிரத்தில், இரிடியம் கலந்திருக்கிறது.
இவற்றை உருக்கும்போது, 361 டிகிரி பாரன்ஹீட்டுக்கு தாமிரம் பிரியும். அடுத்து 2,645 டிகிரி பாரன்ஹீட்டில் நிக்கல் பிரியும். மீதமிருப்பவை இரிடியம் மட்டுமே. இவ்வாறு உருக்கப்பட்டு, சேகரிக்கப்படும் இரிடியம், உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் முதல் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.
இதன் மதிப்பு எவ்வளவு?
ஒரு கிலோ இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கும் விலை சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல். இரிடியத்தை 4,471 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். அவ்வளவு கடினமான வெப்பத்தையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு.
தொடக்கத்தில் பேனா முனைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது செயற்கைக் கோள்களின் வெளிப்புறத்தில் இந்த இரிடியம் கனிமம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக் இயந்திரங்கள், போர் விமானங்களின் என்ஜின் பாகங்களில் கலப்பது எனப் பல்வேறு பயன்பாடுகளுக்கு இரிடியம் பயன்படுகிறது.இப்படி, அரிதான எந்த பொருளுக்கும் எப்போதும் ஒரு தேவை உண்டு.