என்னை லவ் பண்ண மாட்டியா! எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! நடுரோட்டில் அலறிய 12ம் வகுப்பு மாணவி
ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலிக்க மறுத்த மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் இவரது மகள் ஷாலினி (வயசு 17) பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முனிராஜ் ஒரு தலைபட்சமாக மாணவி ஷாலினியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்த முனிராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் அலறிய மாணவி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். அருகில் வந்த மற்ற மாணவிகளும் கதறி துடித்துள்ளனர்.
மாணவியை கொலை செய்த இளைஞர்
இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்த நிலையில் மாணவியை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சோதனை செய்த நிலையில் மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த நிலையில் கொலை செய்த இளைஞர் முனிராஜை கைது செய்தனர்.





















