கர்நாடகாவில் ஒன்றாக சேர்ந்து கையை வெட்டிக்கொண்ட 14 மாணவிகள்.. என்ன நடந்தது..? புரியாமல் விழிக்கும் போலீசார்!
கர்நாடகா தனியார் பள்ளி ஒன்றில் 9 மற்றும் 10 ம் வகுப்புகளை சேர்ந்த 14 மாணவிகள் ஒன்றாக தங்கள் இடது கைகளை வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தில் உள்ள தண்டேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 9 மற்றும் 10 ம் வகுப்புகளை சேர்ந்த 14 மாணவிகள் கடந்த சனிக்கிழமையன்று தங்கள் இடது கைகளை வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இது கூட்டு தற்கொலைக்கான முயற்சியே என்று கூறப்படுகிறது.
எதற்காக சிறுமிகள் இத்தகைய கொடூர செயல்களை செய்தார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், மன உளைச்சலில் இருக்கும் சிறுமிகளுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுமிகளைக் கண்டிக்கவில்லை என்று காவல்துறை மற்றும் கல்வித் துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
என்ன நடந்தது..?
தனியார் கன்னட பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை மதியம் பள்ளி நேரம் முடிந்ததும் வெட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. பள்ளி பொதுவாக சனிக்கிழமைகளில் மதியம் முடிவடையும். பள்ளி நேரம் முடிந்ததும் அந்த மாணவிகள் தங்கள் இடது கையில் காயத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பள்ளி நிர்வாகத்திடம் என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் குடும்பத்தினர் தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதால், பயம் மற்றும் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறை க்கு தகவல் கொடுத்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமிகளின் கைகளில் சில சென்டிமீட்டர் ஆழத்திற்கு வெட்டுகள் இருந்ததாகவும், ஒரு சில சிறுமிகளின் கைகளில் 14 முதல் 15 வெட்டுகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த வெட்டுகள் அனைத்தும் , ஷேவிங்கிற்கு பயன்படுத்தப்படும் ரேசர் பிளேடுகளை கொண்டு வெட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தற்போது தண்டேலியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வரும் தண்டேலி போலீஸ் வட்டத்தின் இன்ஸ்பெக்டர் பீமன்னா சூரி கூறுகையில், “தாங்கள் ஏன் இவ்வாறு செய்தோம் என்பது குறித்து ஒவ்வொரு சிறுமியும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு பெண் தன் தாயை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக குற்ற உணர்ச்சியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகக் கூறினாள். மற்றொரு பெண் தனது மாமாவின் சமீபத்திய மரணத்தை சமாளிக்க முடியாததே தனது செயல்களுக்கு காரணம் என்று கூறினார். மேலும் ஒரு பெண் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக மற்றொரு பெண் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
“காவல்துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. முதற்கட்ட விசாரணைகள் உறுதியான முடிவுகளைத் தராததால், தற்போது இந்த வழக்கு மனநல நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். புதன்கிழமை முதல் சிறுமிகளின் வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யத் தொடங்குமாறு தண்டேலி தொகுதி கல்வி அதிகாரிக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”என்று கார்வார் காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தன் கூறினார்.