Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
New Tesla Roadster: டெஸ்லா நிறுவனம் தனது புதிய ரோட்ஸ்டர் மாடலை, காற்றில் பறக்கும் ராக்கெட் வேரியண்டில் அறிமுகப்படுத்தி, சர்வதேச அளவில் கார் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

New Tesla Roadster: டெஸ்லா நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டர் கார் மாடல், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திலேயே மணிக்கு 96 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் பறக்கும் ரோட்ஸ்டர்:
டெஸ்லா நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தனது ரோட்ஸ்டர் கார் மாடலை முதல்முறையாக காட்சிப்படுத்தியது. அதன் பிறகு சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கான்செப்டில் இருந்த டிசைனில் இருந்து சில மாற்றங்களை மேற்கொண்டு முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வெர்ஷனானது கூர்மையான டிசைன் மற்றும் மூன்று வித்தியாசமான கான்ஃபிகரேஷனை கொண்டுள்ளது. அவை பெர்ஃபார்மன்ஸ், த்ரஸ்ட் மற்றும் ராக்கெட் ஆகியவை அடங்கும். இதில் டாப் என்ட் வேரியண்டானது வானில் சாகசங்களை செய்யும் வகையில் த்ரஸ்டர்களை கொண்டு இருப்பது கார் பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நொடிக்கு 100 கிலோ மீட்டர் வேகம்
ரோட்ஸ்டர் கார் மாடலின் சாலை சோதனையை நேரலை மூலம், உலக மக்களுக்கு டெஸ்லா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் பறக்கும் காரை தலைகீழாக ஓட்டுவது, வானில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தலைகீழாக புரட்டுவது உள்ளிட்ட சாகசங்களும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் டெஸ்லாவின் தகவல்படி, இந்த காரானது ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மணிக்கு 96 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது. ஒற்றை இருக்கை ராக்கெட் எடிஷனின் ஆக்சிலரேஷன் இதை விட வேகமாக இருக்கும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த எடிஷன் என குறிப்பிடாமல் முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 483 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 370 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://t.co/KBWjjWknXe
— Elon Musk (@elonmusk) October 16, 2026
ரோட்ஸ்டர் - 3 எடிஷன்கள், வித்தியாசமான திறன்கள்
எண்ட்ரி லெவல் கான்ஃபிகரேஷனான பெர்ஃபாமன்ஸ் எடிஷனானது இரண்டு இருக்கைகளை கொண்ட சாலை பயன்பாட்டிற்கானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் உடன் மல்டி மோட் சக்ஷன் சிஸ்டத்தை ஒருங்கிணைத்து மணிக்கு 96 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 1.6 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகளை கொண்ட த்ரஷ்ட் எடிஷனனானது பின்புற சக்கரங்களில் பொருத்தப்பட்ட கோல்ட் கேஸ் த்ரஸ்டர்களை பெற்றுள்ளது. இது ட்ராக் பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 0.9 விநாடிகளிலேயே மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுமாம். டாப் எண்ட் வேரியண்டான ஒற்றை இருக்கை ராக்கெட் எடிஷன், பெரிமீட்டர் ரவுண்டட் கோல்ட் கேஸ் த்ரஸ்டர்களை பயன்படுத்துகிறது. இவை முன்னோக்கிய மற்றும் மேல்நோக்கிய ஆக்சிலரேஷன் மற்றும் ரொடேஷனல் இயக்கத்தை செயல்படுத்துவதாக டெஸ்லா கூறுகிறது. இது மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தை 0.59 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா கார் பறப்பது எப்படி?
டெஸ்லாவின் இந்த அணுகுமுறை, கூடுதல் டயர் க்ரிப்பை, டயர்களை முழுமையாகச் சாராத உந்துவிசையுடன் இணைக்கிறது. சக்சன் சிஸ்டம் காரை தரை தளத்தை நோக்கி இழுக்க உதவுகிறது. அதே நேரத்தில் கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்ஸ் கம்ப்ரெஸ்ட் கேஸை வெளியேற்றுவதன் மூலம் விசையை உருவாக்குகின்றன. டெஸ்லா தனது த்ரஸ்டர் அமைப்பு, டயர்கள் மூலம் கிடைக்கும் விசையை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிக விசையை உருவாக்க முடியும் என்று விளக்குகிறது. அதிக கம்ப்ரெஸ்ட் கேஸை கொண்டு செல்வது, பறக்கக்கூடிய நேரத்தை அதிகரிக்கும் என கூறினாலும், கால அளவை நிறுவனம் விளக்கவில்லை. SR-71 மற்றும் F-35 விமானங்களை தனது வடிவமைப்புக்கு உத்வேகமாக எடுத்துக்கொண்டதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
Turns out the future does have flying cars https://t.co/6fexPp6SXI
— Elon Musk (@elonmusk) October 16, 2026
ரோட்ஸ்டர்: வடிவமைப்பு & உற்பத்தி
எடையைக் குறைக்கும் நோக்கில் மேனுவல் கட்டுப்பாடுகளும் நிலையான இருக்கை அமைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் எடையைக் கட்டுப்படுத்த மெக்னீசியம், டைட்டேனியம் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் காரின் மொத்த எடை, பேட்டரி கொள்ளளவு, மோட்டார் வெளியீடு அல்லது விரிவான பவர்டிரெய்ன் கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. டெஸ்லா இந்த காரின் உற்பத்தியை 2028ம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக தற்போதே முன்பதிவுகளும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















