களத்தை தெறிக்க விட வருகிறது Thar OG.. புதிய தொழில்நுட்பம், அதிக பவர், என்ன விலை?
புதிய Thar OG காரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், இன்ஜின், விலை மற்றும் பழைய தாரில் இருந்து செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி என்றாலே நினைவுக்கு வரும் முக்கியமான கார்களில் ஒன்று மஹிந்திரா தார். 3-டோர் தார் ஏற்கனவே தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நிலையில், அதன் புதிய தலைமுறை அப்டேட் செய்யப்பட்ட மாடலான Thar OG தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய தாரின் அடிப்படை தோற்றத்தையும் ஆஃப்-ரோடு தன்மையையும் தக்கவைத்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பம், அதிக பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன.
புதிய Thar OG-யில் என்ன ஸ்பெஷல்?
Thar OG-யின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று அதன் புதிய M_Glyde 4G பிளாட்ஃபார்ம். இது முன்பு Thar Roxx-ல் பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபார்ம் ஆகும். இதன் மூலம் காரின் கட்டமைப்பு உறுதித்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பின்புறத்தில் புதிய Pentalink suspension மற்றும் Watts Link அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும்போது காரின் நிலைத்தன்மையும் பயண வசதியும் மேம்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. ZXT வேரியண்ட்டில் Frequency Dependent Damping தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது.
வெளிப்புறத்தில் புதிய LED ஹெட்லேம்ப், DRL, LED இன்டிகேட்டர்கள், புதிய 5-ஸ்லாட் கிரில் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உள்ளே புதிய பிரவுன்-பிளாக் இன்டீரியர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.
இன்ஜினில் என்ன மாற்றம்?
Thar OG-யில் 1.5 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 162 PS பவர் மற்றும் 330 Nm டார்க்கையும், 2.2 லிட்டர் டீசல் 152 PS பவர் மற்றும் 330 Nm டார்க்கையும் வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் 118 PS மற்றும் 300 Nm டார்க்கை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், 4WD ஆப்ஷனும் கிடைக்கிறது.
பாதுகாப்பிலும் அப்கிரேடு
புதிய Thar OG-யில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆஃப்-ரோடு பயன்பாட்டுக்காக Sand, Snow, Mud என மூன்று டிரைவ் மோடுகள், Electronic Differential Lock மற்றும் Brake Lock Differential போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
என்ன விலை?
Thar OG-யின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.32 லட்சம். டாப் வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.18.99 லட்சம் வரை செல்கிறது. அறிமுக விலை நவம்பர் 30, 2026 வரை பொருந்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025-ல் அறிமுகமான அப்டேட் செய்யப்பட்ட Thar ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் வந்த நிலையில், Thar OG-யின் முக்கிய வேறுபாடு வெறும் தோற்ற மாற்றம் மட்டுமல்ல. புதிய பிளாட்ஃபார்ம், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், கூடுதல் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக பவர் கொண்ட இன்ஜின்கள் என தாரின் அடிப்படை தயாரிப்பிலேயே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்






















