500 கி.மீ ரேஞ்ச், மிகப்பெரிய பேட்டரி பேக், உச்ச பாதுகாப்பு: ஹூண்டாய் Genesis GV90 சிறப்பங்கள்!
ஹூண்டாய், தனது முதல் முழு அளவிலான ஃபிளாக் ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான Genesis GV90 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு பிராண்டான ஜெனிசிஸ், தனது முதல் முழு அளவிலான ஃபிளாக் ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான Genesis GV90 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் இந்த எஸ்யூவி, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளுடன் இரண்டு முதன்மை வேரியண்ட்களில் வெளிவருகிறது. இதன் நியோலன் வேரியண்டில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் உள்ளதைப் போன்ற 'நியோலன் ஆர்ச் கேட்' அமைப்புள்ள கதவுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
என்ன சிறப்பம்சம்?
சாதாரண கார்களில் இருக்கும் பி பில்லர் இதில் இல்லாமல், முன்புற மற்றும் பின்புற கதவுகள் ஒன்றுக்கொன்று எதிரெதிரே அகலமாகத் திறக்கும்படி சிறப்பான வடிவமைப்பு உள்ளது. பி பில்லர் இல்லை என்றாலும், அதிக வலிமையான எஃகு பீம்கள் மற்றும் மறைக்கப்பட்ட உறுதியான ரோல் கேஜ் அமைப்பு மூலம் காரின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு பாதுகாப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதல்முறையாக, கார் எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தால் பயணிகளின் தலை மற்றும் கழுத்து கூரையில் மோதாமல் காக்கவும், அவர்கள் வெளியே தூக்கி வீசப்படுவதைத் தடுக்கவும் கண்ணாடிக் கூரையை முழுமையாக மூடும் ரூஃப் ஏர்பேக் இதில் இடம்பெற்றுள்ளது.
இது தவிர, மூன்றாவது வரிசை வரை நீளும் கர்டைன் ஏர்பேக்குகள், தனிப்பட்ட இருக்கை பாதுகாப்பு சிஸ்டம் உட்பட மொத்தம் பன்னிரண்டு ஏர்பேக்குகள் உள்ளன. பயணிகளின் இருக்கை நிலை மற்றும் சீட் பெல்ட் பயன்பாட்டைக் கண்காணித்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் நவீன இன்-கேபின் மானிட்டரிங் சிஸ்டமும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பேட்டரி பேக்
இந்த ஏழு சீட்டர் எலக்ட்ரிக் காரில் ஹூண்டாய் மோட்டார் குழுமம் இதுவரை உருவாக்கியதிலேயே மிகப்பெரிய 123.5 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோமீட்டர் தூரம் வரை ரேஞ்ச் வழங்கும். 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 22 நிமிடங்களில் மிக வேகமாக சார்ஜ் செய்யலாம்.

இதனால் நீண்ட தூரப் பயணங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அதிக பவர் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்கள், டூயல் E-LSD மற்றும் ஏர் சஸ்பென்ஷன் வசதிகள் உள்ளன. இதன் டாப் கட்டமைப்பு அதிகபட்சமாக 657 hp பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றுள்ளது.
விலை எப்படி?
இந்த பிரம்மாண்டமான காரின் புதுமையான வடிவமைப்பு, பாதுகாப்பு மற்றும் ரேஞ்ச் போன்ற பல்வேறு முக்கிய விவரங்கள் அனைத்தும் தற்போது தெளிவாக வெளியாகியுள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வமான இறுதி விற்பனை விலை இதுவரை வெளியாகவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்






















